பெங்களூரு,
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் இன்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் வீட்டின் அருகே நின்று விளையாடிய குழந்தை சாத்விக் திடீரென்று காணாமல் போய் விட்டது. இதையடுத்து, தனது குழந்தையை பூஜா தேடினார்.
அப்போது தான் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. அதாவது பூஜா டார்ச் லைட்டை ஆழ்துளை கிணற்றுக்குள் அடித்து பார்த்தார். அப்போது குழந்தை உள்ளே கிடப்பதை கண்டு பூஜா அதிர்ச்சி அடைந்தார். தண்ணீருக்காக 280 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் வராததால் ஆழ்துளை கிணற்றை மூடாமல் அப்படியே விட்டு விட்ட நிலையில், குழந்தை அதற்குள் விழுந்துள்ளது. இதுபற்றி இன்டி போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்த குழந்தை..
நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கியது. ஆழ்துளை கிணற்றுக்குள் கிடந்த குழந்தைக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. அத்துடன் ஆழ்துளை கிணற்றுக்குள் 16 முதல் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
குறிப்பாக குழந்தை சாத்விக் தலைகீழாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருப்பது தெரியவந்தது. அதாவது ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையின் கால் மட்டும் தெரிந்தது. இதையடுத்து, பெலகாவி, ஐதராபாத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். பின்னா், ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் 3 பொக்லைன் எந்திரங்கள், 2 கிட்டாச்சி மூலமாக குழி தோண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில் குழந்தையின் கால் பகுதி ஆழ்துளை கிணற்றின் மேற்பரப்பில் இருந்ததால், காலில் கயிற்றை கட்டி மேலே தூக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது. ஏனெனில் குழந்தை 16 அடி ஆழத்தில்தான் சிக்கி இருந்ததால், ஆழ்துளை கிணறு அருகே குழிதோண்டி மீட்டு விடலாம் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டும் பணிகள் விடிய, விடிய நடைபெற்றது.
10 முதல் 12 அடி ஆழத்துக்கு குழி தோண்டும் வரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் 12 அடி ஆழத்துக்கு மேல் பாறைகள் இருந்ததால் குழந்தை சாத்விக்கை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. அதே நேரத்தில் பாறைகளை வெடி வைத்து உடைத்தால், அதனால் ஏற்படும் அதிர்வால் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் ஆழமான பகுதிக்கு சென்று விட வாய்ப்புள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தார்கள். இதையடுத்து, எந்திரங்கள், கைகள் மூலமாகவே பாறைகளை உடைக்கும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
பாறைகளை உடைக்கும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் தனது குழந்தை உயிருடன் இருப்பதால், பூஜா மகிழ்ச்சி அடைந்தார். அதுபோல், மீட்பு குழுவினரும் குழந்தையின் அழுகுரலை கேட்டு மீட்பு பணியை தீவிரப்படுத்தினார்கள். நேற்று மதியம் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி முடிக்கப்பட்டது. அந்த பள்ளத்தில் இருந்து ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கியிருந்த பகுதிக்கு பக்கவாட்டில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டனர். அந்த துளை வழியாக நுழைந்த மீட்பு குழுவினர், குழந்தை சிக்கியிருந்த பகுதிக்கு கீழ் ஆழ்துளை கிணற்றில் சிறிய அளவில் துளை போட்டனர். பின்னர் மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் குழந்தை சாத்விக்கை தனது கையால் கெட்டியாக பிடித்து வெளியே எடுத்தார். 20 அடி ஆழ குழிக்குள் இருந்து குழந்தையை மீட்பு குழுவினர் வெளியே கொண்டு வந்தனர். அப்போது குழந்தைக்கு உயிர் இருப்பதாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
இதனால் அங்கிருந்த குழந்தையின் தந்தை சதீஷ், தாய் பூஜா, கிராம மக்கள், மற்றும் 20 மணிநேரம் போராடி குழந்தையை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் என அனைவரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள். குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, குழந்தையின் உடலில் காயங்களும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் பெற்றோர் சதீஷ், பூஜா தம்பதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், எங்கள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எங்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சித்தலிங்கேஷ்வரர் அருளால் எங்கள் குழந்தை மறுபிறவி எடுத்து வந்துள்ளான். மறுபிறவி எடுத்து வந்துள்ள தங்களது குழந்தையின் பெயரை சாத்விக் என்பதற்கு பதிலாக சித்தலிங்கேஷ்வர் என மறு பெயர்சூட்ட உள்ளோம். எங்களது குழந்தையை உயிருடன் மீட்க உதவிய மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு படையினர், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், என்றார்கள்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவின் கமாண்டர் தாமோதர் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளை பெரும்பாலும் உயிருடன் மீட்க முடியாது. தற்போது விஜயாப்புராவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை உயிருடன் மீட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், சந்தோசமும் அளிக்கிறது. பாறைகள் இருந்ததால் மீட்பு பணிகளில் இடையூறு ஏற்பட்டது. குழந்தையை உயிருடன் மீட்டது மிகப்பெரிய சவால் ஆகும். குழந்தை தைரியமானது என்று நினைக்கிறேன். இந்த ஆபரேசனுக்கு ‘சாத்விக் பகதூர்’ என்று பெயர் வைத்திருந்தோம், என்றார்.
விஜயாப்புரா மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி பசவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
“ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்திருப்பது பற்றி அறிந்ததும் 20 நிமிடத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் லச்யானா கிராமத்திற்கு சென்றிருந்தனர். உடனடியாக குழந்தைக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. மீட்பு குழுவினர், மாவட்ட கலெக்டரின் துரிதமான நடவடிக்கையால் 20 மணிநேர போராட்டத்திற்கு பின்பு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு இருப்பது மிகுந்த ஆச்சரியமான விஷயமாகும். ஏனெனில் குழந்தை தலைகீழாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து கிடந்தது. 20 அடி ஆழத்தில் பொதுவாக காற்று செல்லும், இருப்பினும் ஆக்சிஜன் செலுத்தி கொண்டு இருந்தோம். அதே நேரத்தில் 20 மணிநேரமாக தண்ணீர், உணவு உட்கொள்ளாமலும், சூரிய ஒளிபடாமலும் இருந்துள்ள நிலையில் குழந்தையை பத்திரமாக மீட்டு இருப்பது வியப்பை அளிக்கிறது. பெரிய மனிதர்கள் என்றால் பயம் வந்துவிடும். இது குழந்தை என்பதால், பயம் தெரியாமல் ஆழ்துளை கிணற்றுக்குள் கிடந்துள்ளது.” என்றார்.