உணவில்லாமல் ஐந்து நாட்கள் வரை தான் பட்டினியாக இருந்த அனுபவங்களைக் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாராயணமூர்த்தி, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பல நாட்கள் உணவு இல்லாமல் அலைந்த தனது கதையைப் பகிர்ந்துள்ளார்.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதரகத்தால் செவ்வாய்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாராயணமூர்த்தி கூறுகையில், “உங்களில் பெரும்பாலானோர் பசியை அனுபவித்திருக்க மாட்டீர்கள். நான் அனுபவித்திருக்கிறேன். ஐரோப்பாவில் நிஷ் என்ற பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் 120 மணிநேரம் இடைவிடாமல் பசியை அனுபவித்தேன். இந்நகரம் பல்கேரியாவிற்கும் பின்னர் யூகோஸ்லாவியாவிற்கும் இன்றைய செர்பியாவிற்கும் இடையில் இருக்கிறது’’ என்றார்.
மேலும், இந்தியாவின் திட்டங்கள் குறித்துப் பேசியவர், “இங்கிருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் இந்திய அரசாங்கத்திடமிருந்து நல்ல தரமான மற்றும் அதிக மானியத்துடன் கூடிய கல்வியைப் பெற்றுள்ளோம்.
எனவே, நாகரிக மக்களாகிய நாம் நமது தேசத்திற்கு நன்றி செலுத்தி, ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளின் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல கல்வியைப் பெற உதவ வேண்டும்.” என்றார்.
அட்டை பெட்டி குடோனில் உறங்கிய நாராயண மூர்த்தி…
இந்திய அமெரிக்க எழுத்தாளரான சித்ரா பானர்ஜி திவாகாருணி சமீபத்தில், சுதா மூர்த்தி மற்றும் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து `An Uncommon Love: The Early Life of Sudha and Narayana Murthy’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த புத்தகத்தில் இன்ஃபோசிஸின் ஆரம்ப நாள்களில் வாடிக்கையாளர் வேலைக்காக நாராயண மூர்த்தி அமெரிக்கப் பயணம் சென்றபோது, `டேட்டா பேசிக்ஸ் கார்ப்ரேஷன்’ என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்த, டான் லைலெஸ் என்பவர், அவரிடம் நான்கு படுக்கையறை கொண்ட வீடு இருந்தபோதும், நாராயண மூர்த்தியை ஜன்னல் இல்லாத அட்டைப் பெட்டிகளால் சூழப்பட்ட ஒரு ஸ்டோர் ரூமில் உறங்கும்படி கூறிய சம்பவத்தை குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.