ஃபேமிலி சென்டிமென்ட், அதிரடி-ஆக்ஷன் என தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ட்ரீட்களை அன்லிமிட்டெட் ஆகக் கொடுப்பவர் இயக்குநர் ஹரி.
‘சிங்கம்… சிங்கம்’ என மிரட்டும் பிஜிஎம்களாக இருக்கட்டும்… ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என அடித்து துவம்சம் செய்யும் ஃபைட்களாக இருக்கட்டும்… எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் ஃபாஸ்ட்டாக மூவ் ஆகும் காட்சிகளாகட்டும்… மேக்கிங்கால் மிரட்டுகிறவர் ஹரி. அவரது, மகன் ஸ்ரீராம் ‘ஹம்’ (Hum) என்ற குறும்படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். லயோலா கல்லூரியில் விஸ்காம் ஃபைனல் இயர் படித்துக்கொண்டே இயக்கத்தில் களமிறங்கியிருக்கிற ஶ்ரீராம் ஹரியிடம் வாழ்த்துகளுடன் பேசினேன்.
“சின்ன வயசுல இருந்தே அப்பாகூட ஷூட்டிங்கெல்லாம் போயிருக்கேன். அங்க நடக்குற விஷயங்களை எல்லாம் அப்சர்வ் பண்ணியிருக்கேன். அதுமட்டுமில்லாம, படம் பார்க்கணும்னு வீட்டுல கேட்டா நோ சொன்னது கிடையாது. அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரொம்ப ஃப்ரெண்ட்லி.
சினிமா இன்ட்ரஸ்ட் இருந்ததாலதான் லயோலா காலேஜ்ல விஸ்காம் சேர்ந்தேன். இதை பண்ணாத, அதை பண்ணாதன்னு என்னைக்குமே என் விருப்பத்துக்கு அப்பா, அம்மா தடை சொல்லமாட்டாங்க. ‘உனக்கு பிடிச்சிருக்கா… அதை செய்’ அப்படின்னு அந்த விஷயத்துக்கு எந்தளவுக்கு என்கரேஜ் பண்ண முடியுமோ அந்தளவுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. என் மேல இவ்ளோ நம்பிக்கை வெச்சு எல்லாத்துக்கும் துணை நிற்கும் அப்பா, அம்மாவுக்கு எப்பவுமே நான் உண்மையாவும் நன்றியோடவும் இருக்கணும்னு நினைக்கிறேன்.
அதேமாதிரி, நான் குறும்படம் இயக்கினது முதல் முறை கிடையாது. சின்ன வயசிலேர்ந்தே நிறைய எடுத்திருக்கேன். அதை அப்பா அம்மாக்கிட்ட காண்பிச்சுக்கிட்டே இருப்பேன். அதனால, அவங்களுக்கு இப்போ எடுத்த படம் சர்ப்ரைஸும் கிடையாது. அப்பாக்கிட்ட காண்பிச்சப்போ, அவர் முகத்துல தெரிஞ்ச சந்தோஷத்திலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். ‘இதை, யூடியூப்ல வெளியிட வேணாம். அதுக்குமேல ட்ரை பண்ணுங்க’ன்னு சொன்னார். இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடிக்க ஒருவாரம் ஆச்சு. படத்தை ரெண்டு வாரத்துக்குள்ள எடுத்து முடிச்சுட்டோம். அதுக்கப்புறம், ஓ.டி.டியில கொண்டுவர அப்பாவோட உதவி இல்லாம ட்ரை பண்ணினேன்.
ஆனா, எதுவும் கிடைக்கல. அதுக்கப்புறம்தான், யூடியூப்ல வெளியிட்டோம். உண்மையிலேயே இவ்ளோ ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு நாங்க கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. வழக்கமா ரெகுலரா போஸ்ட் பண்ற மாதிரிதான் எங்க யூடியூப்லயே போஸ்ட் பண்னினோம். 400 சப்ஸ்கிரைபர்ஸ்தான் இருக்காங்க. ஆனா, குறும்படத்தை வெளியிட்டதும் இவ்ளோ வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. வீடியோ பப்ளிஷ் பண்ணினதுமே ஒரு லட்சம் வியூஸை நெருங்கிடுச்சு. நிறைய பேர் எங்களை வாழ்த்தினதோடு, அங்க தப்பு பண்ணியிருக்கீங்க; இங்க தப்பு பண்ணியிருக்கீங்கன்னு ஹானஸ்ட்டா விமர்சிக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு. அடுத்த தடவை அந்தத் தப்பையெல்லாம் சரி பண்ணிக்குவோம்.
வெளியில இருக்கிறவங்க எல்லாம் நினைக்கலாம். இவங்கக்கிட்ட பணம் இருக்கு. ஈஸியா எடுத்துடுவாங்கன்னு. அந்தமாதிரியெல்லாம் எதுவுமே கிடையாது. என்னுடைய க்ளாஸ்மேட் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே சேர்ந்து அவங்க கையில இருக்கிற காசை போட்டுத்தான் இந்த படத்தை எடுத்தோம். இது, பணமா இருக்கட்டும்… கிரியேட்டிவிட்டி ஒர்க்கா இருக்கட்டும் முழுக்க முழுக்க டீம் ஒர்க். ஃப்ரண்ட்ஸ் எல்லோருடைய உழைப்பும் இல்லைன்னா இந்த படமே கிடையாது.
நான் சினிமா குடும்பங்குறதால வெளியில தெரியலாம். அங்கீகாரம் கிடைக்கலாம். ஆனா, என் ஃப்ரெண்ட்ஸோட உழைப்பும் தெரியணும். அதுதான், என்னோட விருப்பம். என் அப்பாவும் அதைத்தான் விரும்புவார். அடிப்படையிலிருந்து, நானே எல்லாத்தையும் கஷ்டப்பட்டு கத்துக்கிட்டு வரணும்னு அப்பா நினைக்கிறார்” என்று தனக்கு பக்கபலமாக நின்ற டீமை நன்றியோடு கூறும் ஸ்ரீராம் ஹரியிடம் “உங்களது சித்தியை வைத்து இயக்கியது எப்படி? அடுத்து நடிப்பா இயக்கமா?” என்று கேட்டபோது,
“நான் கேட்டுக்கிட்டதுக்காக சித்தி வந்து நடிச்சுக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சொல்லணும். அவங்க, நடிக்கலைன்னா இந்தளவுக்கு எங்களோட ஷார்ட் ஃபிலிம் கவனம் பெற்றிருக்குமான்னு தெரியல. எங்களை என்கரேஜ் பண்ணணும்னு நடிச்சுக் கொடுத்தாங்க. என் தாத்தா மாமாவுக்கெல்லாம் ஷார்ட் ஃபிலிம் ரொம்ப பிடிச்சிருந்தது. பேரன் இயக்கினதுல தன்னோட பொண்ணு நடிச்சது தாத்தாவுக்கு பெருமிதம்.
அதேமாதிரி, சினிமாவுல வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம். எனக்கு எது அமையுதோ அதை சிறப்பா பண்ணுவேன்” என்ற ஸ்ரீராம் ஹரியிடம், “அப்பாவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கற்றுக்கொள்ளாமல் நடிகர் விஷாலிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றுவது ஏன்?” என்று கேட்டபோது,
“அப்பாக்கிட்ட இருந்தா டைரக்ரோட பையன்னு ஒருவித மரியாதையோடும் தயக்கத்தோடும் அணுகுவாங்க. அப்போ, ஷூட்டிங் ஸ்பாட்டுல கள நிலவரத்தை கத்துக்க முடியாது. வெளியில போனாதான், அடிப்படையில என்னென்ன கஷ்ட நஷ்டங்கள் இருக்குன்னு கத்துக்க முடியும். நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அதனாலதான், விஷால் சார்க்கிட்ட ‘துப்பறிவாளன் -2’ படத்துல உதவி இயக்குநரா சேர்ந்து மூணு மாசமா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். எல்லோருமே அண்ணன்களா ரொம்ப இயல்பா பழகுறாங்க. அது எனக்கு பிடிச்சிருக்கு. விஷால் சார் ரொம்ப திறமையானவர், ரொம்ப தன்னம்பிக்கையும் சின்சியாரிட்டியையும் அவர்கிட்ட பார்க்கிறேன். அவரோட ஸ்டைல் ஆஃப் மேக்கிங் செம்மையா இருக்கும். ‘துப்பறிவாளன் 2’ தியேட்டர்ல வரும்போது பார்த்து பாராட்டுவீங்க” என்கிறார் கேஷுவலாக.