தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஆட்சி அமைத்தார்.
இதுவரை இரண்டு பேருக்குக்கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. சட்டபூர்வமாக ஊழல் செய்யலாம் என்று தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பா.ஜ.க ஊழல் செய்துள்ளது. இந்தியாவில் முழுவதும் உள்ள கட்சிகளின் தேர்தல் பத்திரம் நிதியை ஒருபுறமும் பா.ஜ.க-வின் தேர்தல் பத்திர நிதியை மறுபுறமும் வைத்தால் முக்கால்வாசி நிதி பா.ஜ.கவிடம்தான் இருக்கும்.
ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு பா.ஜ.க வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை ஏவி சோதனை செய்கிறது என்றால், அந்த நிறுவனம் அதை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால், அந்த நிறுவனம் பா.ஜ.கவிற்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் அந்த நிறுவனத்தின் மீதான வழக்குகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படும்.
உலகிலேயே இந்தியாவில் உள்ள ஜி.எஸ்.டி வரியின் குழப்பம் எந்த நாட்டிலும் இல்லை, ஜி.எஸ்.டி வரிப் படிவத்தில் சிறு தவறு இருந்தால் அதற்கு அவர்கள் விதிக்கும் அபராதத்தை கட்டுவதற்குப் பதிலாக நாம் தொழிலையே மூடிவிட்டு செல்லலாம்… அந்த அளவிற்கு அபராதம் விதிக்கின்றனர். இந்த தேர்தல் என்பது இரண்டாவது சுதந்திரப் போராட்டம், நாம் நாட்டை பாதுகாக்க, நம் வீட்டை, நம் வீட்டுப் பெண்களை நம் மக்களைப் பாதுகாக்க இந்த ஆட்சியை நாம் விரட்ட வேண்டும். பாஜக-வில் உள்ள 44 எம்.பி-க்கள் மீது பாலியல் குற்ற வழக்குகள் உள்ளது.
பிரதமர் மோடி இதுவரை நம்மை வந்து எட்டிப் பார்த்ததே கிடையாது. வெள்ள நிவாரணம் எதுவும் கொடுக்கவில்லை. மோசமான மத்திய அரசு இங்கு உள்ளது. பா.ஜ.க கூட்டணி, எந்த சின்னத்தில் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ’இந்துக்களுக்குப் பாதுகாப்பு’ என்று பா.ஜ.க சொல்கிறது. இந்து மக்களுக்கு வேலை கொடுத்தீர்களா? இந்து மக்களுக்குப் படிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தீர்களா?
ஆனால், தமிழகத்தில் 1,330 கோயில்களுக்கு நம்முடைய முதலமைச்சர் கும்பாபிஷேகம் செய்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் பலன் பெறக்கூடியவர்கள் பெரும்பான்மையாக இந்து மக்களாக இருக்கக்கூடியவர்கள்தான். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய தி.மு.க ஆட்சி. இதேபோன்று மத்தியிலும் ஆட்சி உருவாக வேண்டும். அது நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சிதான். நம் நாட்டின் மக்களைப் பாதுகாக்கும் ஆட்சியை நாம் உருவாக்க வேண்டும்” என்றார்.