ராஜபாளையம்: “தரணி சர்க்கரை ஆலை 5 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் தரணி சர்க்கரை ஆலை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்” என ஜான் பாண்டியன் பேசியுள்ளார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான் பாண்டியன் ராஜபாளையம் பச்சமடம், ஜவகர் மைதானம், அம்பலப்புலி பஜார், ஶ்ரீரெங்கபாளையம், பேருந்து நிலையம், பொன்விழா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “ராமதாஸ், ஜி.கே.வாசன், பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் அடங்கிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் மெகா கூட்டணி. அதிமுகவும், திமுகவும் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களிடம் பேசுகிறார்கள். அவர்களால் தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியாது.
தரணி சர்க்கரை ஆலை 5 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.25 கோடி நிலுவை தொகையை செலுத்தாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் உடனடியாக தீர்த்து இருப்பார். ஆனால், கடந்த முறை இங்கு வெற்றி பெற்றவர் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க முயலவில்லை. நான் வெற்றி பெற்றால் தரணி சர்க்கரை ஆலை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். நாங்கள் சாதனை செய்வதற்காக வாக்கு சேகரிக்கிறோம். எதிர்க்கட்சியினர் கொள்ளையடிப்பதற்காக வாக்கு சேகரிக்கின்றனர்” என்றார்.