65 வயதான முதியவர் ஒருவர், மலேசியாவிலிருந்து டெல்லி வந்திருக்கிறார். டெல்லி வந்த அவர் ஸ்விகி உணவு டெலிவரி ஆஃப்-இல் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். பல மணி நேரம் ஆகியும் உணவு டெலிவரி ஆகாததால் விரக்தி அடைந்த அவர், ஸ்விகி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதனால் கூகுளில் சென்று ஸ்விகி கால் சென்டர் என தேடி திரையில் காணப்பட்ட தொலைபேசி எண்ணை அழைத்து நடந்தவற்றைக் கூறியிருக்கிறார். அப்பொழுது தொலைபேசியில் எதிரே பேசிய நபர் அவரது வங்கி டெபிட் கார்டு தகவல்களைப் பெற்று, ரூ.35 ஆயிரம் பணத்தை எடுத்திருக்கின்றனர். 35 ஆயிரம் பணத்தை இழந்ததை அறிந்த அந்த முதியவர், மீண்டும் அந்த கூகுளில் காண்பித்த ஸ்விகி கால் சென்டர் நம்பரை தொடர்புகொண்டு பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதைத் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது போனில் பேசிய நபர் `இதற்கு முன் உங்களுடன் உரையாடியது நான் இல்லை. அது என்னுடைய ஜூனியர். எனவே மீண்டும் தகவல்களைக் கூற வேண்டும்’ என கூறி, வங்கி தகவல்களைப் பெற்றிருக்கிறார்.
மேலும் அங்கிருந்தே அந்த முதியவரின் போனிற்கு குளோனிங் ஆக்டிவேஷன் லிங்க்குகளை அனுப்பி, அவரது போனை குளோன் செய்து அதன் மூலம் வங்கியிலிருந்து மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது.
பணத்தை இழந்த அந்த முதியவரின் மகன் நிகில் சாவ்லா, இன்ஸ்டா பிரபலமாவார். நிகில் தனது இன்ஸ்டா பதிவில் தனது தந்தை மோசடி நபர்களால் பணத்தை இழந்தது பற்றிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், `மலேசியாவிலிருந்து டெல்லி வந்த எனது தந்தை, ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவையாளர்கள் என நினைத்து, மோசடி கும்பலிடம் மூன்று லட்சம் பணத்தை இழந்துள்ளார். நான் மலேசியாவில் இருப்பதால் டெல்லி காவல்துறை எனது தந்தைக்கு உதவுமாறு கோரிக்கை வைக்கிறேன்’ என வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்த பதிவிற்குப் பதில் அளித்த டெல்லி காவல்துறை, சம்பவம் குறித்து சைபர் க்ரைம் இணையதளத்தில் புகார் தெரிவிக்கவும், அதன் பிறகு காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அறிவுறுத்தியது. மேலும் இந்த பதிவிற்கு விடை அளித்த ஸ்விகியின் அதிகாரபூர்வ தளம், ஸ்விகி வாடிக்கையாளர்களுக்கு என்று அதிகாரபூர்வ எண் என்ற ஒன்றை இதுவரை வழங்கியது இல்லை. வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிப்பதாக இருந்தால், சாட் பாக்ஸ் மூலமே புகார் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
மற்றொரு வீடியோ வெளியிட்ட நிகில், `இது போன்ற மோசடி இணைய தளங்களைத் தொழில்நுட்ப புரிதல் இல்லாத வயதானவர்களுக்கு இளைய சமுதாயமான நாம் தான் இணையதளம் மோசடிகளைக் குறித்து எடுத்துரைக்க வேண்டும் மேலும் swiggy அந்த மோசடி இணையதளத்தை அகற்றி உள்ளது. கூகுள் தேடல் மூலம் காண்பிக்கப்படும் தகவல்களை அப்படியே நம்பிவிட வேண்டாம். அதற்குரிய அதிகாரபூர்வ இணையதளங்களில் காண்பிக்கும் தகவல்களை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.