புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்தரப் பிரதேசத்தின் லால்கஞ்ச் (தனி) மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் முனைவர் இந்து சவுத்ரி. சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய, சிறந்த கல்வி பின்னணி கொண்ட இந்து சவுத்ரி தனது தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்துக்குச் சென்று மாயாவதியின் குரலாக ஒலிப்பாரா என்பதை களம்தான் தீர்மானிக்கும்.
பகுஜன் சமாஜ் கட்சி: மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் முக்கியமான மாநிலமாகும். ஏனெனில், உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவிலான தொகுதிகள் இருக்கின்றன. அதாவது 80 தொகுதிகள் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி இண்டியா கூட்டணியுடன் இணைந்தால், இண்டியா கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல அக்கட்சித் தலைவர் மாயாவதி, ‘பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்’ என அதிரடியாக அறிவித்துவிட்டார்.
மாயாவதி தற்போது வரை 37 வேட்பாளர்களை அறிவித்துள்ளார். பகுஜன் கட்சியைச் சேர்ந்த லால்கஞ்ச் தொகுதியின் எம்பியான சங்கீதா ஆசாத் இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சக்திவாய்ந்த அரசியல் தலைவராக உலா வருபவர் மாயாவதி. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து, தான் எழுப்பிய ஆக்ரோஷ கேள்விகளால் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்பதை மறுக்க முடியாது. மாயாவதியின் நம்பிக்கையைப் பெற்ற இந்து சவுத்ரியின் பின்புலம் குறித்து பார்ப்போம்.
யார் இந்த இந்து சவுத்ரி? – உத்தரப் பிரதேசம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள நிகாஸ்பூர் கிராமத்தில் பிறந்தவர்தான் இந்து சவுத்ரி (Indu Chaudhary). அவர் தனது குழந்தைப் பருவத்தை லக்னோவிலுள்ள ரயில்வே காலனியில் கழித்தார். லக்னோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.எட்., எம்.ஏ., மற்றும் பிஎச்.டி வரை படித்துள்ளார். அவர் ஆங்கிலத்தில் பிஎச்டி படித்துக்கொண்டிருக்கும்போது, சைனிக் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
அதன் பிறகு, புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) ஆங்கிலத் துறையின் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டாக்டர். பி.ஆர். அம்பேத்கர், மன்யவர் கன்ஷி ராம் மற்றும் குமாரி மாயாவதி ஆகியோரின் கருத்துகளை தனது பேச்சின் மூலம் கொண்டுபோய் சேர்க்கிறார்.
சிறந்த பேச்சாளரான இந்து, பகுஜன் தலைவர்களின் போராட்டங்களுக்காக வலுவாக குரல் கொடுத்து வருகிறார். தனது கட்சிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், “பகுஜன் சமூகத்தின் நலனுக்காகப் பணியாற்றும் பெஹன் குமாரி மாயாவதி மற்றும் மன்யவர் கன்ஷிராம் ஆகியோரின் பணியைத் தொடர்வேன்” என்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கும், சரளமாக ஆங்கிலம் பேசுக்கூடியவராக அறியப்படும் இந்து சவுத்ரி, பிஎஸ்பியின் சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராக அறியப்படுகிறார். அவர் இந்தத் தொகுதியில் தனது வெற்றியை பதிவு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிந்தைய பகுதி: பட்டியலின இளம் பெண் வேட்பாளர்… யார் இந்த சாம்பவி சவுத்ரி? | 2024 தேர்தல் கள புதுமுகம்