புதுடெல்லி: 1980 களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் வெளியான ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் பாஜக வேட்பாளராகி உள்ளார். உத்தரப்பிரதேசம் மீரட்டில் போட்டியிடும் அவருக்காக அவருடன் அத்தொடரில் லஷ்மண், சீதாவாக நடித்த சகநட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் பலனை மக்களவைத் தேர்தலில் அனுபவிக்க பாஜக தயாராகி வருகிறது. 1980களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் வெளியான ராமாயணம் தொடரில் ராமராக நடித்தவருக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராமராக நடித்தவர், மகராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த நடிகர் அருண் கோவில். இவரை உத்தரப்பிரதேசம் மீரட்டில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அருண் கோவிலுடன் தொலைக்காட்சி தொடரில் அப்போது லஷ்மண், சீதாவாக நடித்த தீபிகா சிக்கலியான் மற்றும் சுனில் லெஹரி பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
உபியில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் மீரட் தேர்தல் இடம் பெற்றுள்ளது. இங்கு ஏப்ரல் 20 முதல் 25 வரை ராமாயணம் தொடரின் அனைத்து நட்சத்திரங்கள் குழுவை பிரச்சாரத்தில் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்தத் தொடரில் சீதாவாக நடித்த தீபிகா ஏற்கெனவே 1991 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக பரோடாவில் போட்டியிட்டு எம்.பி.,யாக இருந்தார். இப்போது அதே கட்சியான பாஜகவில் ராமராக நடித்த அருண் கோவிலின் முறையாகிவிட்டது.
இந்த ராமாயண நட்சத்திரக் குழுவினருக்கு, கடந்த ஜனவரி 22-ல் அயோத்தி ராமர் கோயில் திறப்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இவர்களின் மூலம், உ.பி.,யில் பாஜக அயோத்தியின் ராமர் கோயில் திறப்பின் பிரச்சாரத்தை தீவிரமாக்க உள்ளது.