கர்நாடக மாநிலம், பெங்களூருவில், கடந்த மார்ச் 1-ம் தேதி ராமேஸ்வரம் கஃபே (Rameshwaram Cafe) உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே, `தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்தனர்’ என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து பா.ஜ.க-வுக்கு எதிராகக் கண்டனங்கள் எழ, தான் கூறியதற்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக பா.ஜ.க நிர்வாகி ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்திருப்பதாக, கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் ட்வீட் செய்திருக்கிறார்.
மாநில சுகாதார அமைச்சரான தினேஷ் குண்டு ராவ் தனது ட்வீட்டில், “ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி சாய்பிரசாத் என்பவரை என்.ஐ.ஏ தனது கஸ்டடிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. குண்டுவெடிப்புக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று கூறும் பா.ஜ.க இப்போது என்ன கூறும்… பா.ஜ.க நிர்வாகியை என்.ஐ.ஏ தற்போது காவலில் எடுத்திருப்பதால் பா.ஜ.க-வுக்கு தொடர்பு இருக்கிறது என்று அர்த்தமில்லையா…
மத பாதுகாப்பு என்ற பெயரில் மாநிலத்தில் காவி பயங்கரவாதத்தை பா.ஜ.க நடத்திவருகிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா… ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை நாட்டில் திணிக்கும் மத்திய பா.ஜ.க இதற்கு என்ன சொல்லும். இந்த குண்டுவெடிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு மீது பழி சுமத்திய மாநில பா.ஜ.க தலைவர்கள் இப்போது பதில் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இதனை மறுக்கும் வகையில் என்.ஐ.ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், வெடிகுண்டை வைத்த குற்றவாளி முசாவிர் ஹுசைன் ஷாசிப் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவருக்கு உடந்தையாக இருந்தவர் அப்துல் மதீன் தாஹா. இருவரும், தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உதவிய, சிக்கமகளூரை சேர்ந்த முஸம்மில் ஷரீப் என்பவர், மார்ச் 26-ம் தேதி கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசத்தில் 18 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.
தற்போது, இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட மற்றும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் கல்லூரி, பள்ளி நண்பர்கள் உட்பட அவர்களுக்குத் தெரிந்தவர்களை வரவழைத்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இது பயங்கரவாத சம்பவம் என்பதால், சாட்சிகளின் அடையாளம் குறித்த எந்தத் தகவலும் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதோடு, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம். அதோடு, சரிபார்க்கப்படாத செய்திகள் வழக்கில் பயனுள்ள விசாரணைகளைத் தடுக்கின்றன. எனவே, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் கைதுசெய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.