அதிக துல்லியமான MRI கருவி:
உலகில் முதன்முறையாக மனித மூளையில் உள்ள நுண்ணுறுப்புகளின் செயல்பாடுகளைக்கூட காட்சிப்படுத்தும் அதிகாந்த சக்தி வாய்ந்த எம்ஆர்ஐ ஸ்கேனிங் இயந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர் பிரான்ஸ் நாட்டின் அணுசக்தி ஆணைய ஆராய்ச்சியாளர்கள். எம்ஆர்ஐ (MRI – Magnetic resonance imaging) ஸ்கேன் என்பது சக்தி வாய்ந்த காந்த அலை உதவியுடன் கண்களால் காண முடியாதவற்றை ஸ்கேன் செய்து திரையில் காண்பது ஆகும்.
மருத்துவத்துறையில் மனித உடலைப் பரிசோதித்து, கண்களால் காண முடியாத பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. பொதுவாக மருத்துவமனைகளில் MRI ஸ்கேன் செய்ய 3 டெஸ்லாஸ் (Teslas) அளவு கொண்ட காந்த அலைகளே பயன்படுத்தப்படும். தற்போது பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள ஸ்கேனிங் இயந்திரமானது பொதுவாகப் பயன்படுத்தப்படும் காந்த அளவைவிட மூன்று மடங்கு அதிக அளவு காந்தத்திறனைக் கொண்டுள்ளது.
அதாவது 11.7 டெஸ்லாஸ் அளவுடைய, 10 மடங்கு துல்லியமாகப் படம் பிடிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். அந்த இயந்திரத்தின் மூலம் மனித மூளையின் நுண்ணுறுப்புகளின் செயல்திறனைப் படம் பிடித்துக் காட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். இந்த இயந்திரத்துக்கு iseult என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இது குறித்து பேசிய அணுசக்தி ஆணைய ஆராய்ச்சியாளர்கள், “2021-ம் ஆண்டு iseult இயந்திரத்தின் மூலம் 11.7 டெஸ்லாஸ் அளவு கொண்ட காந்தப்புலத்தைப் பயன்படுத்தி நாங்கள் முதன் முதலில் பூசணிக்காயை ஸ்கேன் செய்தோம். அதன்பிறகு குறிப்பிட்ட அளவு காந்தப் புலத்தைப் பயன்படுத்தி மனித மூளையை ஸ்கேன் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டு சுகாதாரத்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.
அனுமதி கிடைத்ததையடுத்து, ஆரோக்கியமான தன்னார்வலர்கள் 20 பேருக்கு ஸ்கேன்செய்து பல மாதங்களாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. Iseult ஸ்கேனர் மூலம் எடுக்கப்பட்ட மூளையின் புகைப்படங்களை, 3 டெஸ்லாஸ் அளவு காந்தப் புலத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். Iseult மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூளையின் நுண்ணுறுப்புகளின் செயல்பாடுகளை மிகவும் துல்லியமாகப் படம்பிடித்து இருந்தன. இது அணுசக்தி ஆணையம் இதுவரை எட்டாத துல்லிய நிலையாகும்.
இதுவரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு எவ்வித பின்விளைவுகளும் ஏற்படவில்லை. உலகில் இதைவிட அதிக அளவு டெஸ்லாஸ் அளவு காந்தப்புலம் கொண்ட இயந்திரங்கள் அமெரிக்கா , தென்கொரியா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அவை மனித உடலில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை. ஆகையால் iseult இயந்திரமே உலகின் அதிகளவு டெஸ்லாஸ் காந்தப்புலத்தைக் கொண்டு மனித உடலில் ஸ்கேன் செய்யும் அதிசக்தி வாய்ந்த MRI ஸ்கேனர் ஆகும்.
எதிர்காலத்தில் மருத்துவ துறையில் இதும் பெரும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு மூளையின் செயல்பாடுகள் முதல், ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ (Bipolar disorder) (Biopolar disorder, அல்சைமர் நோய் (Alzheimer), பார்கின்சன் (Parkinson) போன்ற நோய்களின் நரம்பியல் தொடர்பான பிரச்னைகளைக் கண்டறிந்து, அது தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெறவும் இந்த இயந்திரம் பெருமளவு பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.