கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஐ.பி.எல் தொடரை அனைத்து விதமான மக்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கு என்று சைகை மொழியில் கிரிக்கெட் கமென்ட்ரியை கொடுத்து வருகின்றனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், மும்பையைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் உடன் இணைந்து மைதானங்களில் சைகை மொழியில் கிரிக்கெட் கமென்ட்ரியைக் கொடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா சைனிங் ஹேண்ட்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் கெஜ்ரிவால் இதுகுறித்து பேசுகையில், “எனது வாழ்க்கையில் 50 வருடங்களாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன். ஆனால் இப்போதுதான் கிரிக்கெட்டை முதல் முறையாக பார்ப்பதுபோல் உணர்கிறேன். தோனியோ, கோலியோ மைதானத்திற்குள் நுழையும் போதோ அல்லது அவர்கள் ஆட்டமிழக்கும்போதோ மைதானத்தில் என்ன சூழல் நிலவுகிறது என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் இந்த சைகை மொழி கிரிக்கெட் கமென்ட்ரி மூலம் என்னால் அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் மைதானத்தில் எது நடந்தாலும் யாரிடமாவது கேட்டுதான் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தற்போது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் உட்கார்ந்து சமமாக கிரிக்கெட் பார்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது’ என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார். இவரும் ஒரு செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
சைகை மொழியில் கிரிக்கெட் கமென்ட்ரி செய்யும் வர்ணனையாளரான மான்சி தர்மராஜ் ஷா இதுதொடர்பாக பேசும்போது, “ எக்ஸ்பிரசன்ஸ்தான் சைகை மொழிக்கு இலக்கணம் மாதிரி. மைத்தானத்தில் நடக்கும் ஆட்டத்தைப் பற்றி மட்டும் சொன்னால் போதாது. அங்கு நடக்கும் சிறு சிறு விஷயங்களையும் சைகை மொழியில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் எந்தத் தருணத்தையும் மிஸ் செய்யமாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இந்த புதிய முயற்சி பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.