அப்பாவிடம் ஏமாற்றி பணம் வாங்கி படம் தயாரித்தேன்: இயக்குனர் உருக்கம்
விநாயக் துரை என்ற புதுமுகம் தயாரித்து, இயக்கி உள்ள ஹைபர்லிங்க் படம் 'வல்லவன் வகுத்ததடா'. வரும் 11ம் தேதி வெளிவருகிறது. தனஞ்செயன் வெளியிடுகிறார். இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குனரும், தயாரிப்பாளருமான விநாயக் துரை பேசியதாவது : 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இது ஹைபர்லிங்க் கதைக்களம். இந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வராததால் அப்பாவிடம் பிரண்டோடு பிஸினஸ் செய்யப் போகிறேன் என சொல்லி அவரிடம் காசு வாங்கித் தான் இந்தப்படம் எடுத்தேன். 3 நாட்கள் முன்பு வரை அவருக்கு இந்த விசயம் தெரியாது. அவர் வேறு யாரோ தயாரிப்பாளர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார், இப்போது தான் சொன்னேன். அவர் என்னை நம்பவே இல்லை. ஒரு பூர்வீக இடத்தை விற்று அப்பா கொடுத்த பணத்தில்தான் படம் தயாராகி உள்ளது. அம்மாவின் நகைகளையும் அடமானம் வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் படம் மீட்டுத் தரும் என்று நம்புகிறேன்.
'தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' என்பது படத்தின் மையம். பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை. என்னுடைய வாழ்க்கையும் இந்த படம் மாற்றும். என்றார்.