ஏனைய வருடங்களை விட டெங்கு பாதிப்பும் இறப்பு சதவீதமும் குறைந்துள்ளது – சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல

ஏனைய வருடங்களை விட இந்த வருடம் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 64 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட போதிலும் இன்று இரண்டு வலயங்கள் வரை அதனைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல,

ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இந்த புத்தாண்டு காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் இதுபோன்ற செயற்பாடுகளில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத் துறைகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். உண்மையில், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையையும், இறப்பு விகிதத்தையும் இந்த வருடம் குறைக்க முடிந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 64 டெங்கு அபாய வலயங்கள் இருந்தன. இதுவரை இரண்டு வலயங்கள் வரை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது இன்று 200 நோயாளிகளாக குறைந்துள்ளது. காலநிலையும் இதில் தாக்கம் செலுத்தியது என்பதைக் கூற வேண்டும். ஜனவரி முதல் இதுவரை 20,365 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 7289 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். 2024ஆம் ஆண்டில் 08 டெங்கு மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் சூழ்நிலைகளைத் தடுப்பதற்கு தற்போது மிகவும் செயல்திறன்மிக்க வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொற்றுநோய் சூழ்நிலைகளில் இருந்து விடுபட இது மிகவும் உதவியாக இருக்கும்” என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.