போபால்: இந்திய கிரிக்கெட் வீரர் தோனியைப் போலவே ராகுல் காந்தியும் இந்திய அரசியலில் மிகச்சிறந்த ‘ஃபினிஷர்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டலடித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராஜ்நாத் சிங், “சிலநேரம் ஏன் இப்படி நடக்கிறது என்று நான் யோசிப்பதுண்டு. அப்போது நான் ஒரு முடிவுக்கு வருவேன். கிரிக்கிட்டில் சிறந்த ஃபினிஷர் யார்? மகேந்திர சிங் தோனி. அதே போல இந்திய அரசியலில் சிறந்த ஃபினிஷர் யார் என்று யாராவது என்னிடத்தில் கேட்டால், நான் ராகுல் காந்தி என்று சொல்வேன். அதனால் தான் பல தலைவர்கள் காங்கிரஸை விட்டுச் சென்று விட்டனர். காங்கிரஸ் கட்சியை ‘ஃபினிஷ்’ செய்யும்வரை ஓயமாட்டேன் என்று ராகுல் சபதம் ஏற்றுள்ளார்.
பிரதமர் மோடி, நாட்டு மக்களை பல்வேறு இன்னல்களிலிருந்து பாதுகாப்பதற்காக உத்தரவாதங்களை தந்துகொண்டிருக்கும் வேளையில் எதற்கும் உதவாத எதிர்கட்சிகள் வெறுப்பை பரப்பி வருகின்றனர். பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறது. நாங்கள் ராமர் கோயில் கட்டப்படும் என்று கூறியபோது எங்களை கிண்டலடித்தனர். ஆனால் அது கட்டப்பட்டது.
ஆட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றையெல்லாம் நிறைவேற்றி இருந்தாலே இந்தியா எப்போதோ வலிமையான நாடாக மாறியிருக்கும். ஆனால் இன்னொரு பக்கம் பாஜக பத்தே ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.