“திமுக சொல்வதை காங்கிரஸ் ‘செய்கிறேன்’ என வாக்குறுதி கொடுக்கிறது” – ஸ்டாலின் பிரச்சாரம் @ சிதம்பரம்

சிதம்பரம்: “இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் திமுக சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறது. இதுதான் சமூக நீதிக் கூட்டணி. ஏன் என்றால், சமூக நீதி இந்தியாதான் இன்றைய உடனடித் தேவை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சிதம்பரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன், மயிலாடு துறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது, “சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், தலைவர் கருணாநிதியின் நெஞ்சுக்கினிய நண்பர், என் பாசமிகு சகோதரர், வெற்றி வேட்பாளர், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், திமுகவில் பயின்று, விசிக என்ற இயக்கமாக இன்று வளர்ந்திருக்கிறார். அவர் மட்டும் வளரவில்லை, இயக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கிறார். அதனால்தான், தலைவர் கருணாநிதி ‘மேஜர் ஜெனரல்’ என்று அவரை பாராட்டினார். நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அவரின் குரல்; தமிழ்நாட்டின் உரிமைக் குரல். மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் ஆபத்து என்றால், களத்திற்கு முதலில் வரும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில், தமிழகம் மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒருவர் பிரதமராக வர நீங்கள் வாக்களிக்க வேண்டும். சமூக நீதியைக் காக்கும் ஒரு பிரதமர் டெல்லியில் அமர வாக்களிக்க வேண்டும். சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஏன்? அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆள வாக்களிக்க வேண்டும்.

ஏன் என்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடிக்கு, சமூக நீதி மேல் அக்கறை இல்லை. மதச்சார்பின்மையை மருந்துக்குக் கூட நினைப்பது இல்லை. சமத்துவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவை அவருக்குப் பிடிக்கவில்லை. மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை, ‘பகையாளி இந்தியாவாக’ மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்குத் தேவையில்லை.

இப்போது இரண்டு – மூன்று தலைமுறையாகத்தான், நம்முடைய வீட்டில் இருந்து, இன்ஜினியர்கள் – டாக்டர்கள் – வருகிறார்கள். அத்தி பூத்தது போன்று சில ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். அதிகாரிகள் வர முடிகிறது. இதெல்லாம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது. இந்த வேலைக்கு இவர்கள் எல்லாம், இடஒதுக்கீட்டினால் வந்துவிடுகிறார்களே என்று நினைக்கிறார்கள். “எரியுதுடி மாலா… ஃபேன போடு” என்று கதறுகிறார்கள். இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட பாஜகவுடன்தான் – பாமக கூட்டணி அமைத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வரை, விமர்சித்து பேசியவர்கள் இப்போது சேர்ந்திருக்கிறார்கள். மனசாட்சி உள்ள பாமகவின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையுடன் தலைகுனிந்து நிற்கிறார்கள். பாஜக – பாமக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி.

இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் திமுக சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறது. இதுதான் சமூக நீதிக் கூட்டணி. ஏன் என்றால், சமூக நீதி இந்தியாதான் இன்றைய உடனடித் தேவை. தனிநபர்களாக நீங்கள் வாக்களித்தால் மட்டும் போதாது. மக்களிடம் நீங்கள் சென்று பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. அரசியலமைப்புச் சட்டம் அடியோடு மாற்றப்படும். தேர்தல் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும். மாநில அரசுகள் முனிசிபாலிட்டிகளாக மாற்றப்படும். ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தப்படும். நாடெங்கும் மதவெறி தலைவிரித்தாடும்.

மதக் கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைத் தேசத் தியாகிகளாகப் போற்றுவார்கள். அனைத்து மக்களும் சகோதர – சகோதரிகளாக வாழ்கிறோமே – அப்படிப்பட்ட நம்மைப் பிளவுப்படுத்துவார்கள். வேற்றுமைகளும் – அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்குவார்கள். நம்முடைய குழந்தைகளின் படிப்பைப் பறிப்பார்கள். மக்களைச் சிந்திக்க விடமாட்டார்கள். பொய்களையே வரலாறாக எழுதுவார்கள்! இஸ்லாமிய – கிறிஸ்துவ மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றி – அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள்.

பிரதமரா? இல்லை, ஆர்.எஸ்.எஸ். தலைவரா? – ஒரே நாடு – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே ரேஷன் கார்டு – ஒரே உணவு – ஒரே அரசு – ஒரே கட்சி – ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள். பாஜகவின் திட்டங்கள் மிக மிக மோசமானது. அதைவிட ஆபத்தானது. மறுபடியும் நம்முடைய தமிழ்நாட்டின் மீது மாபெரும் பண்பாட்டுத் தாக்குதல் நடத்துவார்கள். ஆட்சி நடத்துவது டெல்லியா? இல்லை, நாக்பூரா? என்று சந்தேகம் வந்துவிடும். பதவியில் இருக்கிறவர் பிரதமரா? இல்லை, ஆர்.எஸ்.எஸ். தலைவரா? என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்.

இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திடக் கூடாது என்றுதான் ஊழல் – குடும்ப அரசியல் – இப்போது கச்சத்தீவு என்று திசைதிருப்புகிறார். பிரதமர் மோடி இப்போது அடிக்கடி சொல்கிறாரே, கேரண்டி… கேரண்டி என்று, அது எதற்குத் தெரியுமா? அவர் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறார். ”Made by BJP” அந்த வாஷிங் மிஷின் மூலமாக, ஊழல் செய்த அரசியல்வாதிகள் பா.ஜ.கவுக்குள் சென்றால், மீண்டும் வரும்போது, ஊழல் கறை எல்லாம் சென்று, வழக்கு எல்லாம் வாபஸ் ஆகி, Clean ஆகிவிடுவார்கள். அதற்குதான் மோடி கேரண்டி கேரண்டி என்று கத்துகிறார்.

பத்தாண்டு ஆட்சியில், பாஜக ஊழல்கள் ஒன்றா – இரண்டா. அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான். உலக நாடுகள் மத்தியில், இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல். கடந்த 5 ஆண்டுகளில் E.D. – I.T. – C.B.I. இவர்கள் கூட்டணி அமைப்புகள் மூலமாக ரெய்டுக்கு அனுப்புவது, அதற்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களாக வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு மெகா வசூல் நடந்ததில்லை.

அதுமட்டுமா, சிஏஜி அறிக்கை வந்ததே. 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. ஆதாரத்தோடு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை பற்றி, மத்திய அரசு, வாயையே திறக்கவில்லை. தேர்தல் பத்திரம் போன்று மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார். அதுவும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்று பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார். இப்படி எல்லா ரகசியங்களும் ஜூன் மாதம் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும். அதேபோன்று, ரஃபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும்.

மக்கள் எல்லாத்தையும் மறந்துவிட்டு இருப்பார்கள் என்ற நினைத்து வகைதொகை இல்லாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய் பேசுகிறார் பழனிசாமி. பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவர்கள்கூட சொல்வதற்குக் கூசும் பொய்யை சர்வ சாதாரணமாகச் சொல்கிறார். பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவராம். இதையெல்லாம் யாராவது, புயல் காற்றில் உட்கார்ந்து பொரிகடலை சாப்பிடுவார்கள், அவர்களிடம் சொல்லட்டும். நீங்கள் உழைத்து முன்னேறினீர்களா, இல்லை, ஊர்ந்து வந்தீர்களா. என்று ஊருக்கே தெரியும். இந்த லட்சணத்தில் வாய்ச்சவடால் அவசியம்தானா.

அதிமுகவில் கடைசித் தொண்டன்கூட தலைவராக முடியும் என்று பழனிசாமி சொல்கிறார். உண்மை என்ன? அதிகமாகக் கப்பம் கட்ட கூடியவர்தான் தலைவராக முடியும் என்று கூவத்தூரில் ஏலம் எடுத்த பழனிசாமி மறக்கலாம். மக்கள் மறக்கவில்லை. முதலில் சசிகலா, பின்னர் தினகரன், அடுத்து பன்னீர்செல்வம் என்று இவர்கள் முதுகுமேல் எல்லாம் சவாரி செய்து, பதவி வாங்கிட்டு அவர்கள் முதுகிலேயே குத்திய நீங்கள் பேசலாமா?

அதே அம்மையார் சசிகலாவைப் பார்த்து “நீ எனக்கு பதவி வாங்கி கொடுத்தியா” என்று ஒருமையில் பேசிய துரோகிதான் பழனிசாமி. தி.மு.க. குடும்பக்கட்சி என்ற பழைய டேப் ரெக்கார்டர் போன்று பாடிக் கொண்டு இருக்கிறார். ஒரு குடும்பத்திற்கே கொத்தடிமையாக இருந்து, அடிமை சேவகம் செய்த வரலாறுதான் அதிமுகவுடையது! நாகரிகம் கருதி, ஓரளவுக்குதான் சொல்கிறேன். நீதியரசர் குன்ஹா அவர்களின் தீர்ப்பைப் படியுங்கள். உங்கள் கட்சி வரலாறு என்ன என்று தெரிந்துக் கொள்வீர்கள்.

தி.மு.க. ஆட்சி ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது என்று அடுத்த உருட்டு உருட்டியிருக்கார் பழனிசாமி. வரலாறு தெரியாத ஞானசூன்யங்களும், தற்குறிகளும்தான் இப்படி பேசுவார்கள். 1976-இல் எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் போட்டதற்காகவும் – 1991-இல் இலங்கைத் தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தது என்று சொல்லியும் தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார்கள். இந்த வரலாறு எல்லாம் தெரியாமல், எதையாவது உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. கொஞ்சம் நாவடக்கத்தோடு பேசுங்கள்.

என்னமோ பழனிசாமிதான் இந்த உலகத்திலயே ’கடைசி விவசாயி’ போன்று, தனக்கு மட்டும்தான் விவசாயத்தைப் பற்றித் தெரியும் என்பது போன்று பேசிக் கொண்டு இருக்கிறார். பழனிசாமி அவர்களே, மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிக் கொட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு விவசாயி என்று சொல்ல முடியுமா உங்களால்.நீங்கள் விவசாயி இல்லை. விவசாயிகளை அழிக்க நினைத்த விஷவாயு!

அடுத்து, “உதயநிதி அரசியலுக்கு வந்ததால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்?” என்று கேட்கிறார். திராவிடத்தின் எதிரிகளையும் – திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிசாமி போன்ற துரோகிகளையும் – தினமும் இப்படிக் கதற விடுகிறாரே… அதற்குத்தான் வந்திருக்கிறார்.

கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்ற சொல்லும் அளவுக்கு ‘ஜெனரல் நாலேஜ்’ வைத்துக் கொண்டு, “இதெல்லாம் நமக்கு தேவையா? பழனிசாமி” சிறிது நாவடக்கத்துடன் பேசுங்கள். இந்தத் தேர்தலுக்கு உங்கள் பிளான் என்ன? பா.ஜ.க. போட்டுக் கொடுத்த பிளான்படி, பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் தி.மு.க.விற்கு வராமல் தடுக்கத் தனியாக நிற்கிறீர்கள்.

உங்களால் அ.தி.மு.க. வாக்குகளையே வாங்க முடியாது. இதில் எப்படி ஓட்டு பிரியும். உங்கள் கட்சிக்காரர்களே, உங்கள் பச்சோந்தித்தனத்தால் நம்பிக்கை இழந்துவிட்டு நிற்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால், அண்ணா படத்தைக் கொடியில் வைத்துக் கொண்டு – கட்சி பேரில் திராவிடம் என்று வைத்துக் கொண்டு, திராவிடம் என்றால் என்ன என்று விளக்கம் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு நிற்கிறார்.

என்னதான் அ.தி.மு.க. நமக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றவர்கள் எல்லாம் இருந்த கட்சிக்குப் பழனிசாமி வந்து வாய்த்திருக்கிறார். கட்சியை மொத்தமாக லீசுக்கு விட்டுவிட்டு மோடியின் ‘B-டீம்’-ஆக இருக்கிறார். அதனால்தான், தமிழ்நாட்டு மக்கள் அவரை நம்புவதற்குத் தயாராக இல்லை.

சி.ஏ.ஏ. சட்டம் வந்தபோது, பழனிசாமி என்ன செய்தார்? நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல, அதில் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார் என்று அகங்காரமாக பேசி மக்களின் முதுகில் குத்தினார். அதுமட்டுமல்ல, இந்த சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடிய மக்கள் மேல் பெண்கள் குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் லத்தி சார்ஜ் செய்தார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடிய, என் மேலும் – மரியாதைக்குரிய ப.சிதம்பரம் – தோழர் பாலகிருஷ்ணன் – வேட்பாளராக இங்கு உட்கார்ந்திருக்கும் சகோதரர் திருமாவளவன் – சகோதரர் ஜவாஹிருல்லா – தம்பி உதயநிதி உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மேல் ஒரே நேரத்தில் F.I.R. போட்டு மோடிக்கும் – அமித்ஷாவுக்கும், தன்னுடைய விஸ்வாசத்தை வெளிக்காட்டினார் பழனிசாமி.

நம்மைப் பொறுத்தவரை, இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு மட்டுமல்ல, பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார் பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தார்.

எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று உழவர்களின் துயரத்தைப் பார்த்து ஏளனமாக சிரித்தார். அதை மறைக்க, பச்சை துண்டு போட்டு உழவர்களுக்கு பச்சை துரோகம் செய்தார் பழனிசாமி. இந்தியாவிற்கு எப்படி மோடி இருண்ட ஆட்சியைக் கொடுத்து இருக்காரோ, அது போன்று இருண்ட ஆட்சியைக் கொடுத்தவர் பழனிசாமி.

தினமும் காலையில் எழுந்ததும், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு எத்தனை அமாவாசை இருக்கிறது என்று கணக்கு போட்டுக் கொண்டு இருக்கும், அரசியல் அமாவாசைதான் பழனிசாமி. தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய அரசியல் அமாவாசை பழனிசாமி அவர்களே, சட்டமன்றத் தேர்தல் வரட்டும்… அ.தி.மு.க.விடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே தி.மு.க. பறிக்கும். இது உறுதி.

இதை ஆணவத்தில் சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த செய்யப் போகும் நன்மைகள் மேல் நம்பிக்கை வைத்து சொல்கிறேன். மக்களைவிட எனக்கு வேறு துணை கிடையாது என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.