ஓசூர் / கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு இடங்களில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசூர் ஜூஜுவாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்தழகு தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 69 பெட்டிகளில் ரூ.15.12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. அதில், 45 பெட்டிகளில் இருந்த நகைகளுக்கு ஆவணங்கள் இருந்தன. மற்ற 24 பெட்டிகளில் இருந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அனைத்து நகைகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நகைகளை கொண்டுவந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஓசூர் உதவி தேர்தல் அலுவலர் பிரியங்காவிடம், பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அந்த நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதேபோல, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நேற்று பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், 14 பெட்டிகளில் ரூ.5 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நகைகள் இருந்தன. எனினும், உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஓசூரில் உள்ள பிரபல தனியார் நகை நிறுவனத்தில் இருந்து, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், கிருஷ்ணகிரி உதவி தேர்தல் அலுவலர் பாபுவிடம் வழங்கப்பட்டு, பின்னர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.