மார்ச் மாதத்தில் அமோகமாக நடந்த கார் விற்பனை… தூள் கிளப்பிய மாருதி சுசுகி – முழு லிஸ்ட் இதோ!

Car Sales In March 2024 In India: இந்தியாவில் கார் வாங்கும் போக்கு சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதே சுற்றுச்சுழலுக்கு நல்லது என்பதை வல்லுநர்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தாலும், இருச்சக்கர வாகனம் மற்றும் கார்களின் விற்பனை என்பது வருடாவருடம் ஏன் ஒவ்வொரு மாதமும் உயர்ந்துகொண்டே வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. கார் வைத்திருப்பது இந்தியா போன்ற நாட்டில் மதிப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

கார் வாங்குவது சேமிப்போ அல்லது முதலீடோ இல்லை என்பதை அதனை வாங்கும் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக முடிந்தளவிற்கு காரை தங்களின் சொந்த தேவைக்கும், வாடகை அல்லது வேறு காரணங்களுக்காவும் பலரும் வாங்குகின்றனர். புதிதாக வாங்குவது போன்று பழைய கார்களை வாங்கும் போக்கும் இந்தியாவில் அதிகம் எனலாம். பழைய கார்களின் சந்தை என்பதும் பெரியதாகும். அந்தளவிற்கு காரின் தேவை அதிகரித்துள்ளது. 

வருடாந்திர வளர்ச்சி உயர்வு

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திற்கான கார் விற்பனை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை விட இந்தாண்டு மார்ச்சின் விற்பனை விகிதம் உயர்ந்துள்ளது. இருப்பினும், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விடவும் 2024 மார்ச்சில் விற்பனை சரிந்துள்ளதை காண முடிகிறது. நிதியாண்டின் கடைசி மாதம் உள்ளிட்ட பல காரணங்களால் பிப்ரவரி மாதத்தை விட மார்ச்சில் விற்பனை குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 381 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 லட்சத்து 35 ஆயிரத்து 976 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன்படி, இந்தாண்டு இந்தியாவில் புதிய கார்களின் விற்பனையில் வருடாந்திர வளர்ச்சி என்பது 9.9% ஆக உள்ளது. கடந்தாண்டு விட நடப்பாண்டில் பல புதிய கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. 

கலக்கும் மாருதி சுசுகி

அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைக்கும் ஏற்ப மாடல்கள் அடுத்தடுத்து வருவதால் கார்களின் விற்பனை உயர்ந்திருப்பதாக தெரிகிறது. மேலும், புதிய நிதியாண்டில் விலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு, பலரும் இப்போதே கார்களை வாங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், 0.8% அளவிற்கு நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தை மார்ச்சில் விற்பனை குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 381 யூனிட்கள் விற்பனயான நிலையில், பிப்ரவரி மாதத்தில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 178 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

குறிப்பாக, இந்த மார்ச் மாதத்தில் மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் கார்கள் நன்றாக விற்பனையாகி உள்ளன. இந்த நிறுவனங்களின் கார் விற்பனை 50 ஆயிரம் யூனிட்களை தாண்டியிருக்கிறது. எப்போதும் போல மாருதி சுசுகி நிறுவனம்தான் இந்த மாதமும் கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்துகிறது. நாட்டின் மொத்த விற்பனையில் 41.3% மாருதி சுசுகி உடையாதுதான். 2024 மார்ச்சில் மாருதி சுசுகி 1 லட்சத்து 52 ஆயிரத்து 718 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. மாருதி சுசுகியின் வருடாந்திர வளர்ச்சி 15% ஆக உள்ள நிலையில், மாதந்திர வளர்ச்சி 4.7% ஆக சரிந்துள்ளது. 

மற்ற நிறுவனங்கள்

ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் ஹூண்டாயின் பங்கு 14.35% ஆகும். 53 ஆயிரத்து 1 யூனிட்கள் விற்பனையாகி உள்ள நிலையில் வருடாந்திர வளர்ச்சி 4.75% ஆக உள்ளது. மேலும், மாதந்திர வளர்ச்சியும் 5.58% ஆக உள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை டாடா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா நிறுவனங்கள் பிடித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் 50 ஆயிரத்து 105 யூனிட்களை விற்பனை செய்துள்ள நிலையில், வருடாந்திர வளர்ச்சி 13.75% உயர்ந்துள்ளது. மாதாந்திர வளர்ச்சி 2.27% வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த விற்பனையில் டாடாவின் பங்கு 13.78% ஆகும். 

மேலும், மகேந்திரா 40 ஆயிரத்து 631 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, வருடாந்திர வளர்ச்சி 12.94 ஆக உயர்ந்துள்ளது. மாதாந்திர வளர்ச்சி 4.17% வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த விற்பனையில் மகேந்திராவின் பங்கு 11.39% ஆகும். குறிப்பாக இந்த பட்டியலில் 5ஆம் இடம் முதல் 14ஆம் இடம் வரை முறையே டோயோட்டா, கியா, ஹோண்டா, MG, ரெனால்ட், வோல்க்ஸ்வாகன், ஸ்கோடா, நிஸான், சிட்ரோயன், ஜீப் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.