அப்பாக்கள்தான் மகள்களுக்கு முதல் ஹீரோ. அந்த வகையில் காமெடி நடிகர் கொட்டாச்சி, தன் மகள் ஆசைப்பட்ட ஒன்றை நிறைவேற்றி வைத்திருக்கிறார். அதாவது, அவரின் மகள் மானசா நீண்ட நாள் ஆசைப்பட்ட கார் ஒன்றை வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இதுபற்றி, நடிகர் கொட்டாச்சியிடம் பேசினேன்.
“என் பொண்ணுக்கு ஒரு பெரிய கார் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எந்தமாதிரி கார்ன்னா ஓப்பனா நின்னு வானத்தைப் பார்க்கிற மாதிரி கார் வாங்கணும்னு ஆசைப்பட்டா. அந்த கார் வாங்கணும்ங்கிறது அவளுக்கு ஏக்கமாவே மாறிடுச்சு.
ஃப்ரெண்ட்ஸோடது, ஷூட்டிங் போற இடத்துல வர்ற கார்ன்னு அந்த மாதிரி கார்கள் வந்தாலே விரும்பி ட்ராவல் பண்ணுவா! ஓடிப்போய் நின்னுக்குவா. மற்ற பிள்ளைங்க போகும்போது இவளுக்கும் ஆசை வந்துடுச்சு. அதை என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பா. அதுக்கான சூழ்நிலை இப்போதான் வந்துச்சு. எங்ககிட்ட இதுக்கு முன்னாடி மாருதி 800 கார் இருந்துச்சு. அது பழசானதால அடிக்கடி நின்னுடும். ஸ்டார்ட் பண்றதுக்கும் கஷ்டப்படுவோம். அதையெல்லாம் யோசிச்சுத்தான் இந்த காரை வாங்கினோம். இது அவளுக்கு பன்னிரண்டாவது பர்த் டே. கூட்டிகிட்டுப்போயி அவகிட்ட சர்ப்ரைஸா காரைக் காட்டினதும், அவ அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல.
Kia Sonet கார்ல அந்த வசதிகள் இருக்குன்னு தெரிஞ்சதும் 13 லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கொடுத்தேன். எங்களோட வசதிக்கும் மீறி லோன் வாங்கித்தான் இந்த காரை வாங்கமுடிஞ்சது. ஆனா, என் பொண்ணோட சந்தோஷம் முக்கியம். எவ்ளோ லட்சமா இருந்தாலும் என் மகளுக்காக நான் வாங்குவேன். அவளை சந்தோஷப்படுத்துவேன். கஷ்டம்… கஷ்டம்னு நினைச்சுக்கிட்டே இருந்தா கஷ்டம் மட்டும்தான் ஜெயிக்கும். நாம வாழ்ற நாள்களில் சந்தோஷத்தை இழந்துடுவோம்.
தாய் தந்தையை சந்தோஷப்படுத்திப் பார்க்க அவங்க உயிரோட இல்ல. தாய், தந்தையா என் மகள் இருக்கா. அவளோட ஆசைகளை நிறைவேற்றி அவளை சந்தோஷப்படுத்தும்போது அப்பா, அம்மாவையே சந்தோஷப்படுத்துற மாதிரி ஃபீல் வருது. கார் வாங்கினதும் மாங்காடு அம்மன் கோயிலுக்கு காரை எடுத்துட்டுப் போயி பூஜை போட்டு சாமி கும்பிட்டுட்டு வந்தோம். கார் வாங்கினா வந்து பூஜை போடுவேன்னு ஈரோடு மாசாணியம்மன் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன். அடுத்ததா, அங்கதான் போகப்போறோம்!” என்கிறார் நெகிழ்ச்சியோடு.