கோவை: மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் காவல்துறை பணியை விடுத்து வந்துள்ளார் அண்ணாமலை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கோவையில் சிங்காநல்லூர், இடையர்பாளையம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இன்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதன்மை தொகுதியாக கோவை விளங்கிக் கொண்டிருக்கிறது. என் மண் என் மக்கள் என்ற யாத்திரையின் மூலம் ஆளுங்கட்சியான திமுகவின் ஊழல்கள், தவறுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டிய பெருமை அண்ணாமலைக்கு சேரும். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை மிகச் சிறப்பாக பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றார்.
முற்போக்கு சிந்தனை, சீர்மிகு செயல்பாடு, நேர்மையான பார்வை, துணிச்சலான விடா முயற்சி ஆகியவை இந்த தொகுதியில் போட்டியிடும் அவரின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் காவல்துறை பணியை விடுத்து வந்துள்ளார்.
அண்ணாமலை வேட்பாளர் என்றால் பலருக்கு இங்கே வயிற்றில் புலியை கரைத்தது போல உள்ளது. கேரளா அரசோடு வாதாடி, போராடி சிறுவாணி நீரை பெற்று தரக்கூடிய வல்லமை பெற்ற வேட்பாளர் அண்ணாமலை என்பதை மறந்து விடக்கூடாது. தொழில் வளர்ச்சி, கோவையை மையமாக கொண்ட ரயில்வே கோட்டம், விமான நிலைய வளர்ச்சி உள்ளிட்ட கோவை வளர்ச்சிக்கு மிகச்சிறப்பான பங்களிப்பை அவர் செய்வார்” என்று ஜி.கே.வாசன் பேசினார்.