புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்க்கும் வெற்றி அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை எனில், ராகுல் காந்தி ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. எனினும், தற்போதும் அவர்தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். கட்சியை மற்றவர்கள் நடத்த அவர் அனுமதிக்கவில்லை.
கடந்த 10 வருடங்களாக இப்படியே செயல்பட்டு வெற்றி பெறாமல் இருக்கும்போது, அவர் ஓய்வெடுத்துக்கொள்வதால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. அடுத்த 5 ஆண்டுகள் வேறு யாராவது காங்கிரஸ் கட்சியை வழிநடத்த அவர் அனுமதிக்க வேண்டும்.
தனக்கு எல்லாம் தெரியும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். உதவியின் தேவையை அவர் உணரவில்லை என்றால் யாரும் அவருக்கு உதவ முடியாது. தான் நினைப்பதைச் செய்யக்கூடிய ஒருவர் தேவை என்று அவர் நம்புகிறார். அது சாத்தியமில்லை.
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் ராகுல்தான் இறுதியானவர். ஒரு தொகுதி தொடர்பான முடிவுகளுக்கு கூட ராகுலின் ஒப்புதல் தேவை என்பதை பல தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்வார்கள்.
எந்தவொரு தனிநபரையும் விட காங்கிரஸும் அதன் ஆதரவாளர்களும் பெரியவர்கள் என்பதால் கட்சிக்கு வழிவிடுவதில் ராகுல் பிடிவாதமாக இருக்கக் கூடாது. காங்கிரஸை ஒரு கட்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. நாட்டில் அது பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது. அது சாத்தியமில்லை. காங்கிரஸ் அதன் வரலாற்றில் பலமுறை பரிணாம வளர்ச்சியடைந்து, மறுபிறவி எடுத்துள்ளது.
சமரசம் செய்யப்பட்ட தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் ஊடகங்களால்தான் கடந்த காலங்களில் தனது கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது என்ற ராகுலின் கூற்று உண்மையல்ல. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம் ஆனால் முழுமையான உண்மை அல்ல.
1984 ஆம் ஆண்டு முதல் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் காங்கிரசின் வாக்குகள் மற்றும் இடங்கள் குறைந்து வருவதால், அதன் செயல்பாட்டில் உள்ள “கட்டமைப்பு” குறைபாடுகளை கட்சி நிவர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்ற கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது; எனவே இத்தகைய கூற்றுக்களை முறியடித்து காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்று கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.