மதுரை: மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றிபெற்றால் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார் என்றுகூறி மதுரையில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து அக்கட்சி ஆதரவு நடிகர், நடிகைகள் ஏராளமானோர் மதுரையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று திரைப்பட நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் பிரச்சாரம் செய்தார். அவர் மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பகுதியில் கடைகள், பொதுஇடங்களில் பொதுமக்களிடம் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் பலரும் அவருடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். காய்கறிகடை, பழக்கடைகளில் வியாபாரிகளிடம் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘மதுரை என்னுடைய சொந்த ஊர். ஆனால், இதுவரை யாருக்காகவும் மதுரைக்கு பிரச்சாரத்துக்கு வந்ததில்லை. எனது உடன்பிறவா சகோதரரான அதிமுக வேட்பாளர் சரவணனுக்காக முதல் முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்தேன்.
இம்முறை மருத்துவர் சரவணன் உறுதியாக வெற்றி பெறுவார். படித்தவர், மருத்துவர், சொந்த ஊர்காரர் என்பதால் நிச்சயமாக வெற்றி அடைவார். தொடர்ந்து ஏழை மக்களுக்கு நல்லது செய்வார். அவர் வென்றால் எய்ம்ஸ் மருத்துவமனை வர முயற்சி எடுப்பார். இலவசமாக மக்களுக்கு மருத்துவம் பார்ப்பார். எனவே, ஏழை, எளிய மக்கள், கண்ணை மூடிக் கொண்டு அவருக்கு வாக்களிக்கலாம்’’ என்று கூறினார்.