சென்னை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானதே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், நடைமுறை சாத்தியமற்றது என்றும் பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது. 2014 மக்களவை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, 10 ஆண்டுகாலம் மக்கள் விரோத ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது. கடந்த 2019 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் இந்திய பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் கோடி டாலராக – அதாவது 5 லட்சம் கோடி டாலராக – இந்திய மதிப்பில் ரூபாய் 390 லட்சம் கோடியாக உயர்த்தி உலகத்தின் ஐந்தாவது நிலையிலிருந்து மூன்றாவது நிலை பொருளாதார நாடாக உயர்த்திக் காட்டுவேன் என்று உரத்த குரலில் பேசினார்.
ஆனால், 1990-91 இல் ரூ. 25 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2003-04 இல் 13 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளில் 2013-14 இல் ரூ. 100 லட்சம் கோடியாக இருமடங்காக கூடியது. இதை 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியோடு ஒப்பிட்டால் 2014-2024 வரை ரூ. 173 லட்சம் கோடியாகத் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடி அறிவித்தபடி மொத்த உள்நாட்டு உற்பத்தி இரு மடங்காக கூடவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.
2014, 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் கருப்பு பணத்தை ஒழித்து ரூ. 85 லட்சம் கோடியை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சத்தை டெபாசிட் செய்வோம் என மோடி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன் என்று கூறினாரே, இன்றைக்கு விவசாயிகளின் நிலை என்ன? தலைநகர் தில்லியில் கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளிலே உண்டு, உறங்கி போராட்டம் நடத்தி 740 பேர் உயிர் துறந்தும் விவசாய சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்த பிரதமர் மோடியை விட ஒரு கல் நெஞ்சக்காரர் வேறு எவராவது இருக்க முடியுமா ?
விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்து 10 ஆண்டுகள் கடந்த பிறகும் நிறைவேற்றாத விவசாயிகள் விரோத அரசு மோடி அரசு என்று தான் கூற முடியும். இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிற போது விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன் என்று கடந்த 28 பிப்ரவரி 2016 அன்று நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை நினைவுகூற கடமைபட்டுள்ளோம். ஆனால், இன்றைய நிலையில் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தங்களது விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் வருமானம் குறைந்து 2022 இல் கடன் சுமை ரூ. 23 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. கடன் சுமைக்கு இலக்கான மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது. வங்கிக் கடன் மற்றும் பயிர்ச்சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நிலைமை அதிகரித்துள்ளது. மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி 2014 இல் இருந்து 2023 வரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இவர்களது உயிரிழப்புக்கு மோடி பொறுப்பேற்க வேண்டாமா ?
பிரதமர் மோடி அறிவித்த கிசான் நிதியுதவி திட்டம் கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றப்பட்டதா என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டிற்கு ரூ. 6000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2015-16 விவசாய கணக்கீட்டின்படி 14.64 கோடி விவசாயிகளுக்கு ரூ. 6000 வீதம் ரூபாய் 88 ஆயிரம் கோடி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு வழங்கியதோ 2018-19 இல் ரூ. 6005 கோடி. 2019-20 இல் ரூ. 49,196 கோடி. 2020-21 இல் ரூ. 38,872 கோடி. நாட்டில் மொத்தமுள்ள 14.64 கோடி விவசாயிகளில் 9.24 கோடி விவசாயிகளுக்குத் தான் பிரதமர் விவசாய நிதியுதவி திட்டம் கிடைத்திருக்கிறது. ஏறத்தாழ 5.40 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் மறுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?
எனவே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறை சாத்தியமானது எதுவோ அதை கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் நியாய பத்திரமாக நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இதை விமர்சனம் செய்வதற்கு மக்கள் விரோத பாசிச ஆட்சி நடத்திய பா.ஜ.க.வுக்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.