ஜோர்ஹட்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவை விட அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா விமர்சித்துள்ளார்.
அசாம் மாநிலம், ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தல் பேரணிக்கு இடையில் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரசின் தேர்தல் அறிக்கை ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தும் அரசியல். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கானது இல்லை. பாகிஸ்தானுக்கானது போலத் தெரிகிறது. சமூகத்தை பிளவு படுத்தி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே காங்கிரஸின் மனநிலையாக உள்ளது.
பாஜக ஒரு புரட்சி வடிவத்தை முன்னெடுத்துள்ளது. அது இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றும். மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். துப்ரி தொகுதியில் இருந்து நேர்மறையான தகவல்கள் வந்திருக்கின்றன” என்றார்.
அசாம் முதல்வரின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மாநில காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பிதப்ரதா போரா கூறுகையில், “சர்மா போன்ற சந்தர்ப்பவாதிகளால் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளை புரிந்து கொள்ள முடியாது. ஹிமந்த பிஸ்வா சர்மா பல ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தும் கட்சியின் முக்கிய கொள்கையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதனால் தான் அவர் பாஜகவுக்குச் சென்றார். அக்கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்ட காங்கிரஸ் கட்சியை அவதூறு செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிகை அனைத்து பிரிவு மக்களின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது” என்றார்.
முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர் காங்கிரஸ் கட்சி ‘நியாய பத்திரம்’ என்ற பெயரில் 5 நியாயங்கள், அதன் கீழ் 25 வாக்குறுதிகளை முன்னிறுத்தி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.