கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய சென்ற தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் என்ஐஏ அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின் மேதினிபூர் அடுத்த பூபதி நகரில் உள்ள ஒரு வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த மேதினிபூருக்கு என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது, அவர்களது வாகனங்களை வழிமறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்ஐஏ அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் ஓர் அதிகாரி படுகாயம் அடைந்தார். கல்வீச்சில் என்ஐஏவின் வாகனங்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து என்ஐஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குண்டுவெடிப்பு வழக்கு குறித்து விசாரிப்பதற்காக கடந்த 5-ம் தேதி இரவு மேற்குவங்கத்தின் மேதினிபூர் பகுதிக்கு சென்றோம். அப்போது சமூக விரோத கும்பல் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் எங்கள் குழுவை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். எங்களது வாகனங்கள் சேதமடைந்தன.
2 பேர் கைது: கும்பலின் எதிர்ப்பை தாண்டி 5-ம் தேதி இரவு முதல் 6-ம் தேதி(நேற்று) அதிகாலை வரை 5 இடங்களில் சோதனை நடத்தினோம். அப்போது, குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிலாய் சரண் மைத்தி, மனோபிரத ஜனா ஆகிய 2 பேரை கைது செய்தோம். இருவரும் கொல்கத்தாவில் உள்ளஎன்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் நேற்று கூறும்போது, “என்ஐஏ அதிகாரிகள் மீதுதாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் தொடர்பு உடையவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
என்ஐஏ சார்பில் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்துகிழக்கு மேதினிபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சவுமியாதீப் பட்டாச்சார்யா கூறும்போது, “என்ஐஏ புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
மம்தா குற்றச்சாட்டு: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று தெற்கு தினாஜ்பூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது தவறு. என்ஐஏ அதிகாரிகள்தான் பெண்கள் மீது தாக்குதல் நடத்திஉள்ளனர்.
சோதனை நடத்த நள்ளிரவில்சென்றது ஏன்? திரிணமூல் காங்கிரஸின் பூத் ஏஜென்ட்கள்குறிவைக்கப்படுகின்றனர். அடுத்தடுத்து அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இது பாஜகவின் அநாகரிக அரசியல்.
இவ்வாறு அவர் பேசினார்.
150 பேர் சூழ்ந்து தாக்குதல்: பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில்வெளியிட்ட பதிவில், ‘மேற்குவங்கத்தின் மேதினிபூருக்கு விசாரணைக்காக சென்ற என்ஐஏ அதிகாரிகளை சுமார் 150 பேர் சூழ்ந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். வாகனங்கள் மீது கற்களை வீசி உள்ளனர். பலத்த எதிர்ப்புக்கு நடுவே 2 திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளூர் போலீஸார் செயல்படுகின்றனர்’ என்று குற்றம் சாட்டி உள்ளார்.