விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது உடலுக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவான புகழேந்தி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விக்கிரவாண்டியில் கடந்த 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள திட்டமிட்ட புகழேந்தி, உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர், உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.35 மணிக்கு அவர் காலமானார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மக்கள், கட்சியினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் வேங்கடபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1954-ல் பிறந்த புகழேந்திக்கு கிருஷ்ணாம்பாள் என்ற மனைவி, செல்வகுமார் என்ற மகன், செல்வி, சாந்தி, சுமதி என்ற 3 மகள்கள் உள்ளனர். 1973-ல் திமுக கிளை கழக செயலாளராக இருந்தவர், படிப்படியாக உயர்ந்து 2020-ல்விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ஆனார். 2019 விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தோல்விஅடைந்த அவர், 2021-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.