தைவான்: தினசரி நில அதிர்வுகள் எண்ணிக்கை 314-ல் இருந்து 89 ஆக குறைவு

தைப்பே,

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ந்தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. தைப்பேவில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. தைவானின் கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. சில சரிந்து விழுந்தன.

தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில், 1999-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, 2,400 பேர் உயிரிழந்தனர்.

எனினும், அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்தது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது. அந்நாட்டின் ஒகினவா மாகாணத்தின் தெற்கே கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டன. இதேபோன்று பிலிப்பைன்சிலும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சில் இருந்து சுனாமி எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலநடுக்கத்திற்கு 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,133 பேர் காயமடைந்து உள்ளனர். 6 பேரை காணவில்லை.

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் தினசரி அதிர்வுகள் ஏற்பட்டு வந்தன. இந்த அதிர்வுகள் சில நாட்களாக 89 என்ற எண்ணிக்கைக்கு குறைந்து வருகிறது. தைவானின் மத்திய வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கை அடிப்படையில், தைவானின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, கடந்த சில நாட்களாக 314 என்ற எண்ணிக்கையில் இருந்து, 167, 111 மற்றும் 89 ஆக குறைந்துள்ளது என தெரிவிக்கின்றது.

இன்று காலை 8.12 மணி வரையில், மொத்தம் 681 அதிர்வுகள் தைவானை தாக்கியுள்ளன. இவற்றில், 2 நிலநடுக்கங்கள் 6.0 ரிக்டர் அளவிலும், ஒரு நிலநடுக்கம் 6.5 என்ற ரிக்டர் அளவிலும் பதிவாகி உள்ளன. ஏப்ரல் 3-ந்தேதி காலை 8.11 மற்றும் 10.14 மணியளவில், 6.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதேபோன்று 5 முதல் 6 என்ற ரிக்டர் அளவில் 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தன.

சமீப நாட்களில், 4 முதல் 5 என்ற ரிக்டர் அளவில் மொத்தம் 208 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தன. கடந்த 24 மணிநேரத்தில், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவில் மொத்தம் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தன.

அவற்றில் 5.2 மற்றும் 5.3 என முறையே நேற்று காலை 11.52 மற்றும் மாலை 6.47 மணியளவில் இரு நிலநடுக்கங்களும் மற்றும் இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கமும் அடங்கும். இந்த காலகட்டத்தில், 4 முதல் 5 ரிக்டர் அளவிலான 19 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.