புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியபிரதேசம், கோவா மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நாகர்ஹவேலியை உள்ளடக்கிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது-
வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், மத்தியபிரதேசம் மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாத்ரா-நாகர்ஹவேலியில் அஜித் ராம்ஜிபாய் மகலாவை கட்சி நிறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.