ஒடிசாவின் ஆதாமாலிக் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த ரமேஷ் சந்திர சாய்க்கு, மீண்டும் போட்டியிட பிஜு ஜனதா தளம் வாய்ப்பளிக்கவில்லை. அவரது ஆதாமாலிக் தொகுதியில் முன்னாள் அரசு அதிகாரி நளினி காந்த பிரதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் இந்த தொகுதி எம்எல்ஏ ரமேஷ் சந்திர சாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் நேற்று பாஜகவில் சேர்ந்தார். மோடியின் தொலை நோக்கு பார்வையால் பாஜக.,வில் இணைந்ததாக அவர் கூறினார். ஆதாமாலிக் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கனவே சஞ்ஜீப் சாஹூ என்பவரை வேட்பாளராக பாஜக அறிவித்து விட்டது. இவர் பிஜூ ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் அமைச்சர். இவர் கடந்த 2021-ல் பாஜக.,வில் இணைந்தார்.
ஆதாமாலிக் சட்டப்பேரவை தொகுதி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிதானின் சம்பல்பூர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. எனவே இந்த இரு தொகுதிகளின் வெற்றிக்காக பாடுபடப்போவதாக ரமேஷ் சந்திர சாய் அறிவித்துள்ளார்.
பிஜூ ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கோபால்பூர் எம்எல்ஏ பிரதீப் பனிகிரஹி பாஜகவில் இணைந்து பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகியுள்ளார். பிஜு ஜனதா தளத்திலிருந்து பாஜகவுக்கு தாவிய மற்றொரு எம்எல்ஏ அர்பிந்தா தாளி, ஜெயதேவ் தொகுதியிருந்து போட்டியிடுகிறார்.