சியோனி: மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் ஆயுதப்படை வீரர்களை நேற்று அழைத்துச் சென்ற பேருந்து எதிரில் வந்த கார் மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். 25 வீரர்கள் காயமடைந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து, கேவ்லாரி காவல் நிலைய போலீஸார் கூறியதாவது: வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறப்பு ஆயுதப்படை 35-வது பட்டாலியனைச் சேர்ந்த 26 வீரர்களை ஏற்றி வந்த பேருந்து மாண்டலாவிலிருந்து பான்டுர்னா நகருக்கு சென்றுகொண்டிருந்தது. பின்னிரவு 1 மணி அளவில் சியோனி- மாண்டலா மாநில நெடுஞ் சாலையைப் பேருந்து கடக்க முயன்றபோது எதிரில் வேகமாக வந்த காருடன் மோதியது.
விபத்தில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட்ட 5 பேரில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மூவரும் மாண்டலா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
கார் மீது மோதியதில்வீரர்களின் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில்26 வீரர்கள் காயம் அடைந்தனர். காயங்களுடன் உயிர் தப்பிய அனைவரும் கேவ்லாரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வீரர் ஒருவர் நாக்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீஸார் கூறினர்.