தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், தேர்தல் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த 3 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது அந்த மூன்று பேரின் பைகளைச் சோதித்ததில் ரூ.500 கட்டுகள் ரூ.4 கோடி ரொக்கப் பணமும், அவர்கள் மூவரும் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின. அது தொடர்பாக விசாரித்ததில் மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
தீவிர விசாரணைக்குப் பின்னர்தான் 3 பேரும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் பணியாளர்கள் என்பதும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து இந்த பணத்தைக் கொண்டு வந்ததும், தெரியவந்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,“ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறோம்.” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில்,“திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக, அவரின் உதவியாளர் சதீஷ் மற்றும் 2 பேர் 4.5 கோடி பணத்தைக் கொண்டு சென்றிருக்கின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டைமண்ட் ஹோட்டலில் சோதனை செய்துள்ளனர். இந்தப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பல கோடி பணத்தை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். நயினார் நாகேந்திரன் பெரிய அளவிலான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதேபோல், பா.ஜ.க-வும், தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.
எனவே, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும். தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.