சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் வருகை தந்திருந்தார். பதிரனா ஆடுவாரா மாட்டாரா என்பதைப் பற்றியும் அடுத்தடுத்த இரண்டு தோல்விகளைப் பற்றியும் நிறைய பேசியிருந்தார்.
எரிக் சிம்மன்ஸ் பேசியவை இங்கே, ‘ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஃபார்ம் பற்றியோ கேப்டன்ஸி பற்றியோ நாங்கள் எந்த கவலையும் கொள்ளவில்லை. உயர்தரத்திலான கிரிக்கெட்டில் ஒரு வீரர் இதேமாதிரியான சூழலை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த மாதிரியான களங்களில் கூடுதல் நம்பிக்கையுடன் கூடுதலாக ரிஸ்க்கும் எடுக்க வேண்டும். ருத்துராஜ் அதையெல்லாம் செய்யக்கூடியவர்தான். ரொம்பவே அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படக்கூடியவர்.
கொல்கத்தா அணியின் பவர்ப்ளே ஆட்டத்தை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். அவர்களின் பவர்ப்ளே செயல்பாட்டைப் பற்றித் தனியாக விவாதித்திருக்கிறோம். சில வீடியோ க்ளிப்களை வைத்துக் கொண்டு நிறைய பேசியிருக்கிறோம். பவர்ப்ளேயில் அவர்களைவிட கொஞ்சம் முன்னேறிய இடத்தில் நாங்கள் இருக்க வேண்டும்.
இது ஒரு நீண்ட நெடிய தொடர். அதனால் இந்த மாதிரியான விஷயங்களில் பொறுமையாகத்தான் முடிவெடுக்க வேண்டும். பதிரனா வேகமாக குணமடைந்து வருகிறார். பிசியோக்களின் முடிவே இறுதியானது. நாளைய போட்டியில் அவர் ஆடுவாரா என்பதைப் பற்றி என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.
முஸ்தபிஷூர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு சென்றிருக்கிறார். அவர் எப்போது வரப்போகிறார் எனத் தெரியவில்லை. ஐ.பி.எல் மாதிரியான தொடர்களில் இந்த மாதிரியான சிக்கல்களையும் நாம் எதிர்கொண்டேதான் ஆக வேண்டும்.
இரண்டு தோல்விகளை பெரிய சரிவாக நினைக்கவில்லை. ட்ரெஸ்ஸிங் ரூமில் உபயோகமான உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறோம். என்ன மாற்றங்களைச் செய்யலாம். சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதைப் பற்றி பேசுகிறோம். ஆனால், இதெல்லாம் எப்போதும் நடக்கக்கூடிய உரையாடல்கள்தான். தோல்விகளால் அணியில் எந்த பதற்றமும் பயமும் இல்லை.’ என பேசியிருந்தார்.
சென்னை Vs கொல்கத்தா இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.