இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை யாருக்கும் ரெக்கமண்ட் செய்வதற்குக்கூடப் பயமாய்த்தான் இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முக்கியமான ப்ளஸ் – பைசாதான்!
அதாவது, மிடில் க்ளாஸ் மக்களுக்கு, பெட்ரோலுக்காக Gpay செய்வதற்கு போனை எடுக்கவே தேவையில்லை என்பது வரப்பிரசாதமாக இருந்தாலும், ஆங்காங்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் நடக்கும் விபத்துகளைப் பார்த்தால் கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கிறது. நான் இங்கே விபத்துகள் என்று குறிப்பிடுவது – சாலை விபத்துகளைப் பற்றி இல்லை; மின்சாரத் தீ விபத்து பற்றியது!
என்னதான் Value for Money ஆக இருந்தாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சில நேரங்களில் பயத்தை ஏற்படுத்தினால்கூடப் பரவாயில்லை; உயிர்களையும் காவு வாங்கிவிடுகின்றன என்பது கண்களில் கண்ணீர் வரவழைப்பதாகவே இருக்கிறது. வேலூர் சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும். தந்தையும் மகளும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ் போட்டதால் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பிக்கவே முடியாமல் மூச்சுத் திணறி இறந்த சம்பவம் – மறக்கவே பல மாதங்கள் ஆயின. இப்போது அதேபோன்றதொரு கொடூர சம்பவம் – மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. இங்கே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் மூன்றே வயதான அசிம் வாசிம், இரண்டே வயதாகும் பாரி வாசிம் எனும் 2 குழந்தைகளும் பலியாகி இருக்கின்றனர் என்பது நெஞ்சைக் கனமாக்குகிறது மக்களே!
அவுரங்காபாத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகர் என்கிற கன்டோன்மென்ட் ஏரியாவில் அமைந்திருக்கும் டெய்லர் கடையில் ஒரு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அது துணிக்கடை என்பதால், தீ மளமளவெனப் பரவி – மாடி வரை அதன் புகை சென்றிருக்கிறது. அந்தத் தீ விபத்தால் ஏற்பட்ட புகையில் மூச்சு விட முடியாமல் இறந்திருக்கின்றனர். இத்தனைக்கும் தீவிபத்து ஏற்பட்டது – தரைத் தளத்தில். ஆனால், அவர்கள் இருந்தது மேல் தளத்தில். அந்தளவுக்கு அதன் தாக்கம் பரவியிருக்கிறது என்றால், தீ விபத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சச்சின் துபே என்கிற நபர், ‛‛அதிகாலை 3.30 மணிக்குத் திடீரென ஒரு வெடிச்சத்தம் கேட்டது. ஒரு எலெக்ட்ரிக் வாகனம் ஒன்று சார்ஜ் ஏறிக் கொண்டிருந்தது. அநேகமாக அதுதான் பிளாஸ்ட் ஆகியிருக்கிறது. டெய்லர் கடைக்குள் தீ வேகமாகப் பரவியது. கூலர் இருந்ததால், வாடகைதாரர்களுக்கு அந்தச் சத்தம் கேட்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஓனர்கள் முதல், இரண்டு மற்றும் மூன்றாவது தளத்தில் வசித்து வந்திருக்கிறார்கள்! அந்தளவு அந்தப் புகையின் வீரியம் இருந்திருக்கிறது!’’ என்று மீடியாக்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
மீடியாக்களில் இது பரபரப்பான செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தாலும், அது எந்த எலெக்ட்ரிக் பைக் என்று இன்னும் தகவல் வெளிவரவில்லை.
பொதுவாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் என்னதான் BMS (Battery Management System), IP67 தர ரேட்டிங் என்று பக்கா R&D சோதனையில் ரெடியாகி இருந்தாலும், நம் ஊர் வெப்பத்துக்கு அடாப்ட் ஆவதற்குச் சிரமப்படுவதாகவே தெரிகிறது. மேலும் தவறான சார்ஜிங்கும் தீ விபத்துக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. அதனால், நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருந்தால், இவற்றை ஃபாலோ பண்ணுங்கள்!
. என்னதான் உங்கள் வாகனத்தின் பேட்டரியில் ஆட்டோ கட் ஆப்ஷன் இருந்தாலும், விடிய விடிய சார்ஜ் ஏற்றுவதைத் தவிருங்கள். சில நேரங்களில் இதனால் பேட்டரி பல்ஜ் ஆகி எக்ஸ்ப்ளோஷன்களுக்கு வழிவகுத்து விடுகிறது.
. உற்பத்தியாளர்கள் கொடுத்த வயரையும் சார்ஜரையும் மட்டுமே பயன்படுத்துங்கள்.
. முடிந்தவரை எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் அல்லது சாதாரண பிளக் பாயின்ட்டில் சார்ஜ் ஏற்றுவதைத் தவிர்க்கலாம். நீங்கள் அலுவலகம் போகும்போது, வெளியே ஆத்தரைஸ்டு கம்பெனிகளில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களைப் பயன்படுத்தலாம். இது தினசரி சரிப்பட்டு வராதுதான் என்றாலும், முடிந்தவரை பயன்படுத்தலாம்.
. நிச்சயம் உங்கள் வாகனம் வெளியேதான் சார்ஜ் ஏறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் டிட்டாச்டு பேட்டரி வசதி இருக்கும்பட்சத்தில், பேட்டரியை வீட்டுக்கு எடுத்துப் போய் சார்ஜ் போடுவார்கள். அதிலும் கவனம் தேவை. முக்கியமாக, குழந்தைகளை நெருங்க விடாதீர்கள்.
. ஸ்மோக் டிடெக்டர்கள் எனும் அலாரத்தை முடிந்தவரை வாங்கிப் பயன்படுத்தலாம். ஏதாவது தீ விபத்துக்கான அறிகுறி ஏற்பட்டால், முன்கூட்டியே இது அலார்ம் அடித்து எச்சரித்து விடும்.
. வீட்டில் பழைய லித்தியம் அயன் பேட்டரிகள் இருந்தால் உடனே அதைத் தூக்கி எறிந்து விடுங்கள்.
. ஒரு முக்கியமான விஷயம் – சுள்ளென்ற வெயிலில், நேரடி சூரியஒளி படும்படி முடிந்தவரை சார்ஜ் ஏற்றுவதைத் தவிர்க்கலாம்.
எலெக்ட்ரிக் வாகனங்களைப் பாதுகாப்பாக சார்ஜ் ஏற்றுங்கள்; பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்!