விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் முத்தையா, செய்தியாளர்களை சந்தித்து, அவர் பேசுகையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது, மேகமலை தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாம்பல்நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு பகுதியில் பேச்சியம்மன் கோவில் மற்றும் காட்டழகர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் அமைந்துள்ளது.
மேலும், இந்த வனப்பகுதியில் சில விவசாய பட்டா நிலங்களும் அமையப்பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக செண்பகத்தோப்பு வனப்பகுதிக்குள் நுழையும் நபர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பக்தர்கள் பலமுறை மாவட்ட ஆட்சி தலைவரிடம் முறையிட்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் தெய்வ வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இப்பிரச்னை தொடர்பாக பல்வேறு சமரச கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இங்கு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுத்தடுப்பு அகற்றப்படாமல் தொடர்ந்து செண்பகத் தோப்புக்குள் நுழையும் விவசாயிகள் மற்றும் பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையினரின் இந்த அத்துமீறிய செயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் சுமார் 20 ரூபாய் வசூல் செய்வதால் பக்தர்களின் வழிபாடு உரிமையும் பறிக்கப்படுகிறது. ஆகையால், முறைகேடாக அமைக்கப்பட்ட நுழைவுத்தடுப்பை அகற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம்” என்றனர் காட்டமாக.