MI v DC: `எங்க ஆட்டம் இப்பதான் ஆரம்பிக்குது!' – முதல் வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ்

அதிருப்திகள், சர்ச்சைகள், சலசலப்புகள் எல்லாவற்றுக்கும் தங்களின் முதல் வெற்றி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

வான்கடேவில் நடந்த இந்த ஆட்டத்தில் மும்பை அணியே முதலில் பேட் செய்திருந்தது. 50 ரன்களை மும்பை இந்தியன்ஸின் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட எட்டவில்லை ஆனால் எடுக்கப்பட்ட ஸ்கோரோ 234. சின்ன சைட் பவுண்டரிகள், டெல்லியின் சராசரி பௌலிங் என எல்லாமே சாதகமாக அமைந்து இருப்பினும் அது மட்டுமே மும்பையின் மிரட்டல் பேட்டிங்கிற்குக் காரணமல்ல. தனது இன்னிங்ஸை எந்த வகையில் கட்டமைத்துக் கொண்டது என்பதில்தான் மும்பை முதல் பாதியில் தனது கையை ஓங்க வைத்தது. ஃபைனல் டச் ரோமாரியோ ஷெப்பர்டுடையது என்றாலும் பவர்பிளேயில் 75 ரன்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மிடில் ஓவர்களில் கவனமாக 63 ரன்கள், இறுதியில் டெத் ஓவர்களிலோ ஏறக்குறைய ஓவருக்கு 20 ரன்கள் என்ற கணக்கில் 96 ரன்கள் என கட்டுக்கோப்போடு எடுத்துச் சென்று இலக்கை எகிற வைத்து விட்டனர்.

Rohit

ரயிலின் முன்னிருக்கும் பெட்டி சரியாக நகர்ந்தால் பின் வருபவை அதன் வழியொற்றிப் பயணிக்கும். To Burn all the Bridges என்போமே ரோஹித்தும் இஷானும் இணைந்து செய்ததும் இதனைத்தான். பவர்பிளேயில் இந்தப் போட்டியில் நடந்ததைப் போல் (75 ரன்கள்) சன்ரைசர்ஸுக்கு எதிராக ஏற்கனவே இந்த சீசனில் 76 ரன்களை மும்பை குவித்தருந்தது தான், இருப்பினும் அதில் இரு விக்கெட்களை இழந்திருந்தது. இங்கே அதுவும் நடைபெறவில்லை. விக்கெட்டையும் விடவில்லை, பவர்பிளேயில் பந்து வீசிய ஐந்து பௌலர்களில் யாரையும் விட்டு வைக்கவும் இல்லை. இதுதான் டெல்லி மீது கூடுதல் பளுவை ஏற்றியது.

27 பந்துகளில் 49 ரன்களைக் குவித்த ரோஹித்தின் பேட்டிடம் சற்றும் மடங்கிப் போகும் எண்ணமில்லை. குறிப்பாக ஷார்ட் பால்கள் எல்லாம் இலகுவாக எல்லை கடந்தன.

ரோஹித் 40-களில் ஆட்டமிழப்பது ஐபிஎல்லில் இது இருபதாவது முறை. அதில் பெரும்பாலான போட்டிகளில் 25 அல்லது அதற்கும் குறைவான பந்துகளிலேயே 40-ஐ தாண்டி இருக்கிறார். அணியை முன்னோக்கி உந்தித் தள்ளுவதும் ஏறக்குறைய இந்த 20 பந்துகள் வேறுபாடு தான்.

Rohit

பௌலிங்கில் டெல்லியின் பக்கம் ஒரே ஆறுதல் அக்சர் படேல். வேகத்தைக் கூட்டி ஆசை காட்டி ரோஹித்தை வெளியேற்றிய போது ஆகட்டும், தனது ஃப்ளைட்டட் டெலிவரியை மிட் விக்கெட்டில் சிக்ஸர் ஆக்கிய இஷான் கிஷனை அடுத்த பந்திலேயே Caught and Bowl-ல் வெளியேற்றிய விதமாகட்டும், கலீல் அஹமத்தின் பந்தில் திலக் வர்மாவை வெளியேற்ற அவர் பிடித்த கேட்ச் ஆகட்டும் களத்தில் அவரை விட்டு கண்களை நகர்த்தவே முடியவில்லை.

34 பந்துகளுக்குள் நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி போட்டிக்குள் திரும்ப வந்த டெல்லி கேப்பிட்டல்ஸிற்கு தேக்கம் ஏற்படக் காரணம் நிலைத்த டிம் டேவிட் – பாண்டியாவின் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான். பாண்டியா கிட்டத்தட்ட பந்துக்கு பந்து கணக்கில் ரன் சேர்த்திருந்தாலும் முன்னதாக இருந்த ரன்ரேட்டும், பின்னால் நீண்டு இருந்த ஓவர்களும் அவருக்கு அந்த சுதந்திரத்தை தந்தன. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் தான் டிம் டேவிட். அந்தக் கட்டத்தில் தான் மதகை உடைக்கும் வெள்ளமாக அவரது தீரம் வெளிப்படும், அதுவும் 190+ ஸ்ட்ரைக்ரேட்டில். இப்போட்டியிலும் வெளிப்பட்டது.

Tim David

முதல் 11 பந்துகளில் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டிம் டேவிட் சந்தித்த அடுத்த பத்து பந்துகளில் 32 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை எங்கோ எடுத்துச் சென்று விட்டார்.

அப்போதைக்கு இஷாந்தின் எக்கானமியை விட குறைவாக நார்க்கியாவுடையது இருந்ததால் மட்டுமே நான்கு முழு ஓவர்கள் கோட்டா அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில் முடிக்கையில் ஓவருக்கு 16.2 என அதிகபட்ச எக்கானமி அவருடையது தான். காரணம், இரக்கமே இன்று ஷெப்பர்டால் இறுதி ஓவரில் நிகழ்த்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக். ஸ்லோ பால், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டது, ஃபுல் லெந்த் டெலிவரி என நார்க்கியாவால் வீசப்பட்ட எல்லாவற்றுக்கும் ஷெப்பர்டிடம் விடை இருந்தது. இந்தப் போட்டியில் மட்டுமல்ல இத்தொடர் முழுவதுமே நார்க்கியா வீசும் போட்டியின் இறுதி ஓவர்கள் பலத்த அடி வாங்குகின்றன. சூர்யாவின் டக் அவுட், பாண்டியாவால் வீணடிக்கப்பட்ட பந்துகள் என நேர்ந்திருந்த சேதாரம் எல்லாமே அந்த ஒற்றை ஓவரில் நேர் செய்யப்பட்டது விட்டது. 200+ ரன்களை கடந்த ஆண்டு இதே மைதானத்தில் மூன்று முறை அணிகள் கடந்திருப்பினும் கடினத்தன்மையை இன்னமும் அதிகரித்து டெல்லியை முன் இருக்கும் இலக்கு மலை என மலைக்க வைத்தது அந்த ஒரு ஓவர் தான்.

ரொமாரியோ

பவர்பிளேயிலேயே ஏறக்குறைய போட்டியை இழந்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். வெறும் 46 ரன்கள் என்பது மட்டுமல்ல 21 டாட் பால்களும் இப்படிப்பட்ட இமாலய ரன்களைக் கொண்ட சேஸிங்கிற்கு எவ்வகையிலும் நியாயம் கற்பிக்காது. 29 ரன்கள் வித்தியாசத்தில் மட்டும்தான் டெல்லிக்கு வெற்றி பறிபோய் இருந்தது. இந்த டாட் பால்கள் இட்ட விதை அது என்பதே உண்மை.

7 – 11 ஓவர்களில் திரும்பவும் போர் தொடுக்கத் தொடங்கி 61 ரன்களை ப்ரித்வி ஷா – அபிஷேக் போரெல் குவித்திருந்தனர். விட்டதை பிடிக்கும் உத்வேத்தோடு 10 ஓவர்களில் 94 ரன்களை எட்டி விட்டனர். அந்தப் புள்ளியில் கூட பத்து ஓவர்களில் 141 ரன்கள் என இலக்கு எங்கோ இருந்தது தான் என்றாலும் அதிக விக்கெட்டுகள் கையில் இருப்பதும், ஸ்டப்ஸ், பண்ட் போன்றோரின் இருப்பும் டெல்லிக்கான வாய்ப்புகள் முடிந்து விடவில்லை என்றே கூறிக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு விக்கெட் போட்டியை தலைகீழ் பிம்பமாக மாற்றி விட்டது.

தாக்கத்திற்கான உத்தரவாதத்தை தவறாமல் எப்போதுமே தந்து கொண்டிருக்கும் பும்ராவை ஹர்திக் பாண்டியா 12-வது ஓவரில் உதவிக்கு அழைக்க அவரது லெக் ஸ்டம்ப் லைனில் வந்த யார்க்கர் ப்ரித்வியின் ஸ்டம்பை பதம் பார்த்து அதனை அதிரடியாகச் செய்து முடித்தது. மும்பை முழுமையாக ஆபத்திலிருந்து மீண்ட தருணம் அதுதான். பும்ராவின் 5.5 என்னும் எக்கானமி கம்பீரமாகச் சிரித்தது.

Bumrah

2021-க்கு பிறகு ஐபிஎல்லில் அவர் வீசிய எந்த ஒரு ஓவரும் 15 ரன்களை தாண்டியதில்லை. அதுதான் பும்ரா ஸ்பெஷல் ஸ்பெல்கள். 150 ஐபிஎல் விக்கெட்டுக்கள் என்னும் மைல்கல்லையும் இப்போட்டியில் பும்ரா தாண்டி உள்ளார்.

டெல்லிக்கு பௌலிங்கில் அக்ஸர் என்றால் பேட்டிங்கில் ப்ரித்வி மற்றும் ஸ்டப்ஸ். ஒற்றை ஆளாக ஆடினார் என்றாலும் ஸ்டப்ஸின் ஆட்டத்தை போராட்டம் என்று கூறி விட முடியாது. அந்த அளவுக்கு மும்பைக்கு 284 ஸ்ட்ரைக்ரேட்டில் ஆட்டங் காட்டிக் கொண்டிருந்தார். ரொமாரியோ மற்றும் ப்யூஸ் சாவ்லாவின் ஓவரில் அடித்த சிக்ஸர்கள் எல்லாம் மும்பையை பதற்றத்துக்குள்ளேயே வைத்திருந்தது. ஒருவேளை மறுமுனையில் அவருக்குத் தேவையான ஆதரவு இன்னமும் கிட்டியிருந்தால் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக அது மாறியிருக்கும்.

MI

200+ ரன்களை இதுவரை மும்பை டிஃபெண்ட் செய்யத் தவறியதே இல்லை. இந்த வெற்றியும்கூட மும்பைக்கு மிகப்பெரிய வித்தியாசத்தில் வந்து விடவில்லை. இருப்பினும் ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகு கிடைத்த முதல் வெற்றி என்பதால் அது தந்திருக்கும் நம்பிக்கை இரட்டிப்பானதாகிறது, பாண்டியாவையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.