அட்லி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று தனது முதல் படமாக ஹாருக் கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் பெரும் வசூல் சாதனைப் படைத்து மெகா ஹிட்டானது.
பாலிவுட்டில் ‘டேவிட்’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தாலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முழுப்படத்துக்குமாக பாலிவுட் அறிமுகம் இதுதான். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமும் ஜவான்தான். முதல் பாலிவுட் என்ட்ரியே, நயன்தாராவிற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு ஷாருக் கான் மற்றும் தனுஷ் பற்றிய சுவாரஸ்யமான விஷங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
‘ஜாவான்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி, பாலிவுட் என்ட்ரி மற்றும் ஷாருக்கானுடன் நடித்தது குறித்து பேசியிருக்கும் நயன்தாரா “பாலிவுட்டில் நான் அறிமுகமாக ‘ஜவான்’ மாதிரியான ஒரு பெரிய வெற்றிப் படத்துக்காகத்தான் காத்திருந்தேன். அது சரியா அமைந்து மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் இந்தத் திரைத்துறையில் இருக்கிறோம். எந்தப் படம் வெற்றி பெறும் என்று நமக்குத் தெரியும். அவ்வகையில், ‘ஜவான்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்.
ஷாருக் கானின் படத்தைப் பார்த்துதான் நாமெல்லாம் வளர்ந்திருக்கிறோம். யார்தான் அவருக்கு ரசிகராக இருக்கமாட்டார்கள். நான் அவருடைய பெரிய ரசிகை. ஷாருக் கான் பெரிய நட்சத்திரம், நல்ல நடிகர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் பெண்களை மதிப்பவர். அதுதான் நான் அவரிடம் பார்த்து வியந்த ஒன்று” என்று கூறியிருக்கிறார்.
தனுஷ் பற்றிப் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “தனுஷ் சார் தான் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் கதையை நயன்தாராவிடன் சொல்ல வைத்தார். நயன்தாராவிற்குக் கதை மிகவும் பிடித்திருந்தது. விஜய்சேதுபதிக்கு இந்த ஸ்கிரிப்ட் சரியாக வருமா என்று சந்தேகத்துடன் இருந்தார். பிறகு, நயன்தாரா நடிக்க சம்மதித்த பிறகு, அவரும் ஓகே சொல்லிட்டார். இப்படம்தான் நானும், நயன்தாரானும் பேசவும், பழகுவதற்கும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.