2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்விலேயே ஆளுநர் இதனை தெரிவித்தார்.
எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் சர்வதேச அமைப்புகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் நன்றிகளை கூறிய ஆளுநர் , மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடி அகற்றப்படாமை பாரிய சவாலாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
பூநகரி மற்றும் முகமாலை பகுதிகளில் அதிகளவு கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செயற்பாடுகளில் பணியாற்றிக் கொண்டிருப்போர், தங்களின் உயிர்களை பணயம் வைத்து ஆற்றிவரும் சேவைக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, மீள்குடியேற்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் பெண்களை ஈடுப்படுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் பெண்கள் முதன் முதலாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர். இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு தனது விசேட நன்றிகளையும், பாராட்டுதல்களையும் ஆளுநர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.