ஈபி ஆபிசர் – ரைஸ்மில் ஓனர் ; இன்னொரு ஈகோ யுத்தமாக உருவாகும் ‛தெக்கு வடக்கு'
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே ஈகோ யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி இருந்தன. டிரைவிங் லைசன்ஸ் படத்தில் ஒரு பிரபல ஹீரோவுக்கும் அவரது தீவிர ரசிகனுக்கும் இடையே எதிர்பாராமல் ஏற்படும் ஈகோ மோதலையும், அய்யப்பனும் கோஷியும் படத்தில் ஒரு ஓய்வு பெற்ற இளம் ராணுவ அதிகாரிக்கும் ஓய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே வெடிக்கும் ஈகோ மோதலையும் பரபரப்பாக சொல்லி இருந்தார்கள். பொதுவாகவே இப்படி ஈகோ கான்செப்ட் உடன் வரும் படங்கள் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடும்.
அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் ‛தெக்கு வடக்கு' என்கிற புதிய படம் ஒன்று உருவாகிறது. ஜெயிலர் படத்தில் கலக்கிய வில்லன் நடிகர் விநாயகன் மற்றும் மலையாளத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து குணச்சித்திர நடிகராக மாறிய சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இதில் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரேம் சங்கர் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில் விநாயகன் ரைஸ் மில் ஓனராகவும், சுராஜ் ஈபி அதிகாரியாகவும் நடிக்கின்றனர். இந்த கதையும் ஈகோவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.