டொரோன்டோ,
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என்று மொத்தம் 14 சுற்றில் மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள்.
ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சக நாட்டவர் விதித் குஜராத்தியை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 45-வது நகர்த்தலில் குஜராத்தியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார். மற்ற 3 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இதில் இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்காவின் ஹிகரு நகமுரா இடையிலான ஆட்டம் 29-வது காய் நகர்த்தலில் டிரா ஆனதும் அடங்கும்.
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி, பல்கேரியாவின் நுர்க்யுல் சலிமோவாவை சந்தித்தார். வெள்ளைநிற காய்களுடன் களம் கண்ட வைஷாலி 31-வது நகர்த்தலில் சலிமோவாவை சாய்த்தார். ஏற்கனவே ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டிருந்த வைஷாலிக்கு இது முதலாவது வெற்றியாகும். மற்ற 3 ஆட்டங்களும் டிரா ஆனது.