விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் தரமான மது வகை வழங்க உறுதி செய்யப்படும் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அண்மையில் குப்பம் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார். “நான் இங்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி அமைந்த 40 நாட்களில் மலிவான விலையில், தரமான மதுபானம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வோம். நமது சகோதரர்களின் கோரிக்கையை ஏற்று இதை நான் இங்கு சொல்கிறேன்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. அதில் மதுபானமும் அடங்கும். ஜெகன் மோகன் ரெட்டிதான் இந்த விலையை உயர்த்தியவர்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலுக்காக பாஜக மற்றும் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி. 17 மக்களவைத் தொகுதி மற்றும் 144 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுகிறது.
ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த 2022-23 காலகட்டத்தில் ரூ.24,000 கோடியை கலால் வருவாயாக ஈட்டியுள்ளது என தகவல். 2019-20 காலகட்டத்தில் இது ரூ.17,000 கோடி ஆக இருந்துள்ளது.
இந்நிலையில், “மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு 16 நிறுவனங்கள் மட்டுமே பிரதானமானதாக மது வகைகளை விநியோகம் செய்கின்றன. டிஜிட்டல் பேமெண்ட் முறையின் கீழ் மதுபான கடைகளில் மது வகைகளை விற்பனை செய்ய அரசு முன்வராதது ஏன்? ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு விற்பனை செய்யும் இந்த மதுவை தொடர்ந்து அருந்தி வந்தால் விரைவில் உடல் நலம் பாதிக்கப்படும்” என ஆளும் கட்சியை தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.