`கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று சொல்லுவதைப் போல, தேர்தல் பிரச்சாரத்துகாக தனது சொந்த தொகுதிகளுக்குச் செல்லும் சிட்டிங் எம்.பிக்களுக்கு சிறப்பான வரவேற்பும் ஆங்காங்கே எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அனல் தகித்துவரும் நாடாளுமன்றத்தேர்தல் பிரசார களத்தில், மக்கள் குரலும் சேர்ந்து தீயாய் சேர்ந்து சூட்டை கிளப்பியிருக்கிறது. அந்தவகையில், எந்தெந்த சிட்டிங் எம்.பிக்களுக்கெல்லாம் தங்கள் தொகுதியின் சில இடங்களில் எழுந்த சில எதிர்ப்புகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை:
தென் சென்னை தொகுதியின் தி.மு.க சிட்டிங் எம்.பியாக இருப்பவர் தமிழச்சி தங்கபாண்டியன். மீண்டும் அவருக்கே இந்தத் தொகுதியில் சீட் கொடுக்கப்பட்டிருப்பதால் பல இடங்களில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். தொகுதியின் பல இடங்களில் சிறப்பான வரவேற்பு இருந்தபோதிலும் சில எதிர்ப்பும் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி அருகே உள்ள பாரதிதாசன் நகரில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரது வாகனத்தை வழிமறித்து, எங்களின் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மோசமான நிலையில் சேதமடைந்து இருப்பதாகவும், பலமுறை கோரிக்கை வைத்தும் அவற்றை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பெண்கள், “ஒரு ஓட்டுலகூட ஜெயிக்குறாங்களே…இங்க 1,500 ஓட்டுனா சும்மாவா… அவங்க சுயநலத்துக்காக வாராங்க… யார் செத்தா என்ன வாழ்ந்தா என்ன… அதைப்பத்தி அவங்களுக்கு கவலையே இல்ல… இப்போ போங்க… அடுத்த எலக்ஷன் அப்போ நாங்க உசுரோட இருந்தா பாக்க வங்க!” என்று ஆவேசமாகப் பேசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கிருந்து கிளம்பினார். பின்னர், அதற்கான விரிவான விளக்கத்தையும், மக்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களையும் விளக்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் போட்டிருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.
தயாநிதி மாறன், மத்திய சென்னை:
தொடர்ந்து, மத்திய சென்னை தொகுதி தி.மு.க சிட்டிங் எம்.பி.யான தயாநிதி மாறன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகிறார். தனது மகளுடன் சேர்ந்து அவர் மேற்கொண்ட பிரசாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தநிலையில், லாக் நகர் ஆடம் ரோட்டில் தயாநிதிமாறன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவருடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “வாக்குறுதி கொடுத்தபடி எங்களுக்கு வீடு கட்டித்தரவில்லை, அது சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என அப்பகுதி மக்கள் கேள்விகளால் கூச்சலிட்டுக்கொண்டிருக்க, அதற்கு வாகனத்திலிருந்தபடியே மக்களிடம் கோவமாகப் பேசிய தயாநிதிமாறன், “இருங்கம்மா… நான் பேசுறதை கேளுங்க…நான் யாருக்காகப் பேசறேன்… உனக்காகத்தானே பேசறேன்…எனக்கா பேசறேன்..?” என பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோதிமணி, கரூர்:
அதேபோல, கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் காங்கிரஸ் சிட்டிங் எம்.பி. ஜோதிமணியும் தனது தொகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது சில எதிர்ப்புகளை எதிர்கொண்டார். குறிப்பாக, கரூர் தொகுதிக்குட்பட்ட கோடங்கிபட்டி கிராமத்தில் பிரசாரத்துக்காகச் சென்ற ஜோதிக்கு ஆரத்தி எடுத்த பெண்களில் சிலர், “ஐந்து வருஷமா இந்தப் பக்கமே வராம, இப்போ ஓட்டு கேட்க மட்டும் வர்ரீங்களே?” என கேள்வி கேட்டு அதிரவைத்தார். அதேபோல, வேட்டையார்பாளையத்தில் ஓட்டு சேகரிக்கச்சென்ற போது அங்கிருந்த மக்களில் சிலர், “ஐந்து வருஷமா எம்.பியா இருந்து என்ன செஞ்சீங்க, ரோடு போட்டு கொடுத்தீங்களா? எதுவும் செய்யல…இனிமே நாங்க ஓட்டுப் போட்டு நீங்க என்ன செய்யப்போறீங்க?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்ப அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ஜோதிமணி. இருப்பினும், பல இடங்களில் பரவலான வரவேற்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
கார்த்திக் சிதம்பரம், சிவகங்கை:
சிவகங்கை காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திக் சிதம்பரம் தேவகோட்டை பகுதியில் வாக்கு சேகரித்தபோது, அவரது வாகனத்தை வழிமறித்த இளைஞர் ஒருவர், “2019-ல இதே மாதிரி ஓட்டுக்கேட்டு வந்தீங்க… கொரானா டைம்ல எங்க போனீங்க? எங்களுக்கு என்ன உதவி செஞ்சீங்க? நீங்களும் உங்க அப்பாவும் ஒன்னுமே எங்களுக்கு செய்யல!’ என்று கேள்வி கேட்க, பதிலுக்கு கார்த்திக் சிதம்பரமும் வாக்குவாதத்தில் ஈடுபட அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவர் பேசுகையில், “எனக்கு கட்சியிலும், மக்களிடமும் எதிர்ப்பு இல்லை, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்த சிலர் அவதூறு பரப்புகின்றனர். இது எல்லாம் ஒரு செட்டப்தான். 26 ஆண்டுகளாக தேர்தல் பணிகளை செய்து வருகிறேன், மக்களிடம், அரசியல் மீதும், அரசியல் பரப்புரை மீதும், விருப்பம் குறைந்து விட்டது” என்றார்.
அதேபோல, கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து அவரது தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். மகளிர் உரிமைத் தொகை குறித்து ப.சிதம்பரம் பேசிக்கொண்டிருந்தபோது வரை இடைமறித்த பெண்கள், “மகளிர் உரிமைத் தொகையெல்லாம் வருது… முதல்ல இந்த டாஸ்மாக்கை எப்போ மூடுவீங்க?” எனக் கேள்வி கேட்டு பொரிந்து தள்ளினர். உடனே ப.சிதம்பரம், “ கொஞ்சம் சும்மா இருங்கம்மா… கையெடுத்து கேட்குறேன்… சும்மா இருங்கம்மா!” என்று சொல்ல.. மீண்டும் அந்தப் பெண்கள் பேச ஆரம்பித்தனர். அதற்கு ப.சிதம்பரம் சிதம்பரம், “இவங்க அடுத்த தேர்தல்ல நிக்கலாம்…. நல்லா பேசுறாங்க!” என சிரித்து மழுப்பியபடியே பிரசாரத்தைப் பாதியிலேயே நிறுத்திச் சென்றார்.
அதற்கடுத்து சிதம்பரத்துடன் வந்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியை சூழ்ந்துகொண்ட பெண்கள், “ஒருத்தர் வீட்டுல மூணு பேர் டாஸ்மாக்கால செத்துப் போயிட்டாங்க. தயவு செஞ்சு டாஸ்மாக்கை மூடுங்க என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். தொடர்ந்து இன்னொரு பெண், “என் பையனுக்கு 35 வயசாச்சு ஆனால் இன்னும் கல்யாணம் ஆகல. குடிக்குறானு யாரும் பொண்ணு கொடுக்க மாட்றாங்க!” என்றும் மற்றொரு பெண், “ஐந்து வருஷம் கழிச்சு வந்தீங்கனா கல்லைக் கொண்டு எறிவேன்” என்று பேசியும் தாறுமாறாகக் கேள்விகேட்டும் அதிரவைத்தனர்.
பச்சைமுத்து (எ)பாரி வேந்தர், பெரம்பலூர்:
இதேபோல, பெரம்பலூர் தொகுதில் கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் சேர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஐ.ஜே.கே சிட்டிங் எம்.பி. பச்சைமுத்து பாரிவேந்தர், இந்த முறை பா.ஜக கூட்டணியில் சேர்ந்து அதே தொகுதில் போட்டியிடுகிறார். அந்தவகையில் முசிறி அருகிலுள்ள கொளக்குடி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்களில் சிலர், “ஐந்து வருஷத்துக்கு முன்னால் எங்க ஊரு ஏரியைச் சீரமைச்சு தரேன்னு வாக்குறுதி கொடுத்தீங்க. ஆனா அதைப் பண்ணாம ஐந்து வருஷம் கழிச்சு இப்போதான் இங்க வர்ரீங்க!?” எனக் கேள்விகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த பச்சைமுத்து பாரிவேந்தர், “நான் இங்க வரும்போது நீ என்னை பாக்கல, நீ இங்க வரும்போது நான் உன்னை பாக்கல..!” என்று நாசுக்காகப் பதிலளித்தபடி கிளம்பிச் சென்றார்.
சிட்டிங் எம்.பிக்கள் என்றாலே பொதுவாக தொகுதியின் சில இடங்களில் அதிருப்தி ஏற்பட்ட எதிர்ப்பு எழுவது வாடிக்கையான ஒன்றுதான். அதேசமயம் பல இடங்களில் வரவேற்பும் கிடைக்கும். இரண்டையும் சமாளித்து, எல்லா மக்களையும் அரவணைத்து தங்களுக்கான வெற்றியை உறுதி செய்வதில்தான் அவர்களுடைய திறமை இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY