பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகளின்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல, இந்த பயணங்களின்போது சக பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், விளையாட்டாகக்கூட வெடிகுண்டு போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
இந்த நிலையில், டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர், `நான் அணுகுண்டு எடுத்துச் சென்றால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டு, பரபரப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட பயணிகளின் பெயர், ஜிக்னேஷ் மலான், காஷ்யப் குமார் லாலானி என்று தெரியவந்திருக்கிறது. மேலும், அந்த இருவர்மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 182, 505(1)(பி)-ன் ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் எஃப்.ஐ.ஆரில், “ஆகாசா ஏர் விமானத்துக்கான இரண்டாம் நிலை பாதுகாப்பு சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, ஜிக்னேஷ் மலானி மற்றும் காஷ்யப் குமார் லலானி ஆகியோரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு அழைத்தனர். அதில் ஒருவர், `ஏற்கெனவே சோதனை முடிந்துவிட்ட பிறகு என்ன சோதனை செய்கிறீர்கள் நீங்கள்?’ என்று கேள்வியெழுப்பினார். அதற்கு அந்த அதிகாரி, `விமானம் மற்றும் அதில் பயணிப்போரின் பாதுகாப்புக்கான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை’ என்று தெரிவிக்க, `நான் அணுகுண்டை எடுத்துச் சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என அந்த இருவரில் ஒருவர் கேட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.