மும்பை: மகாராஷ்டிராவின் மீரஜ் நகரின் சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு மேற்கே 400 கி.மீ. தொலைவில் மீரஜ் நகரம் அமைந்துள்ளது. அந்த சிறிய நகரம் இசைக் கருவிகளின் உற்பத்தி மையமாக திகழ்கிறது. அங்கு தயாரிக்கப்படும் சிதார், தம்புரா, வீணை உள்ளிட்ட இசைக் கருவிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவையாக திகழ்கின்றன.
கொல்லர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக இசைக் கருவி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னராட்சி காலத்தில் அவர்கள் வாள் உள்ளிட்ட போர் ஆயுதங்களை செய்து வந்தனர்.
மராட்டிய சாம்ராஜ்ஜியத் தின் வீழ்ச்சிக்கு பிறகு இசைக் கருவிகள் தயாரிப்பில் அவர்கள் ஈடுபட தொடங்கினர். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் இசைக் கருவிகளை தயாரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மீரஜ் நகரின் சிதார், தம்புரா இசைக் கருவிகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது.
இதுகுறித்து மீரஜ் நகர இசைக்கருவிகள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மோசின் மீரஜ்கர் கூறியதாவது:
எங்கள் நகரத்தை சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் இசைக் கருவிகளை தயாரித்து வருகின்றனர். அவர்களின் சிதார், தம்புரா கருவிகளுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. எங்கள் நகரில் இருந்துநாடு முழுவதும் இசைக் கருவிகளை அனுப்பி வைக்கிறோம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
ஆனால் அண்மைக்காலமாக மீரஜ் நகர தயாரிப்பு என்ற பெயரில் சந்தையில் போலி இசைக் கருவிகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்து சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறோம்.
உஸ்தாத் அப்துல் கரீம், கான்சாகேப், பண்டிட் பீம்சென் ஜோஷி,ரஷீத் கான் உள்ளிட்டோர் எங்களது இசைக் கருவிகளையே பயன்படுத்தினர்.
திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் எங்களது மீரஜ் நகரின் இசைக் கருவிகளையே விரும்புகின்றனர்.
இவ்வாறு மோசின் மீரஜ்கர் தெரிவித்தார்.