பஸ்தார்: “காங்கிரஸ், இண்டியா கூட்டணிக்கு ராமர் கோயில் கட்டியதால் ஆத்திரம்” என பிரதமர் மோடி சாடியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவது சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் 500 ஆண்டு கால கனவு நனைவாகி உள்ளது. சத்தீஸ்கர் மக்கள் அதில் மகிழ்ச்சி கொள்வது இயல்புதான். காரணம், சத்தீஸ்கர்தான் ராமரின் தாய்மாமன் வழி இல்லம் இருந்த ஊர். ஆனால், காங்கிரஸுக்கும், இண்டியா கூட்டணிக்கும் ராமர் கோயில் கட்டப்பட்டதில் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனுப்பப்பட்ட அழைப்பதிழை காங்கிரஸும் அதன் அரச குடும்பமும் புறக்கணித்தது. இது தவறான முடிவு என விமர்சித்த கட்சியினர் அக்கட்சியில் இருந்தே விலக்கப்பட்டனர். இது ஒன்றே போதும்… காங்கிரஸ் கட்சி எத்தகைய தூரத்துக்கும் சென்றும் சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் அரசியல் செய்யும் என்பதை நிரூபிக்க.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழ் இந்தியா ஊழலின் அடையாளமாகவே மாறியிருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி தேசத்தை சூறையாட தங்களுக்கு பூரண அனுமதி கிடைத்தது போல் நடந்து கொண்டது. ஆனால், 2014-ல் நம் ஆட்சி அமைந்த பின்னர் அந்த சூறையாடுதலுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதற்கான அனுமதியை நீங்கள் எனக்கு (மோடிக்கு) கொடுத்தீர்கள். நான் அவர்களின் சூறையாடுதலைத் தடுத்து நிறுத்தினேன். அவர்களின் கடை மூடப்பட்டுவிட்டது.
அப்படியென்றால் அவர்கள் என் மீது கோபம் கொள்வார்கள் தானே. கோபத்தில் அவர்கள் என்னை எதிர்ப்பார்கள் தானே. இந்த எதிர்ப்புகளில் இருந்து என்னை யார் பாதுகாக்க முடியும்?. கோடிக்கணக்கான தேச மக்கள், என் தாய்மார்கள், சகோதரிகள் ஆகிய நீங்கள் தான் எனக்கான பாதுகாப்புக் கவசம்.
காங்கிரஸ் கட்சி பழங்குடிகளை எப்போதுமே இழிவுபடுத்தியிருக்கிறது. ஆனால், அதே பழங்குடியைச் சேர்ந்தவரைத் தான் நாம் நமது நாட்டின் குடியரசுத் தலைவராக்கி இருக்கிறோம். பாஜக தான் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு முதல் பழங்குடியின முதல்வரைக் கொடுத்திருக்கிறது. பாஜக பழங்குடிகளுக்காக தனிப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பழங்குடிகள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் சிந்தனைச் சுவடுகளைக் கொண்டுள்ளது” என்றார் பிரதமர் மோடி.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த 6 கட்ட தேர்தல் ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.