வள்ளலார் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு: பார்வதிபுரம் மக்கள் போராட்டம் – 161 பேர் கைதுக்குப் பின் விடுவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்துக்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 161 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளார் அமைத்த வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை வடலூரில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம் ஜோதி தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் கண்பர். இதேபோல் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

இந்த நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இப்போது உள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் இந்து அறிநிலையத் துறை அதிகாரிகள் தொடர்ந்து வடலூர் சத்திய ஞானசபை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பூர்வாங்க பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டிடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு அரசியல் கட்சியினர், சன்மார்க்க நண்பர்கள் மற்றும் பார்வதிபுரம் பொதுமக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர். இந்த எதிர்ப்புகளை மீறி தமிழக அரசு கட்டுமான பணியை தொடங்கியது. தற்போது அஸ்திவாரம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (ஏப்.8) காலை பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், 10 அம்ச கோரிக்கைகளாக, ”சத்திய ஞானசபை பெருவெளியில் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், வள்ளல் பெருமானாரின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் மூதாதையர்களான பார்வதிபுர கிராம மக்கள் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது, பெருவெளி பெருவெளியாகத்தான் இருக்க வேண்டும், 1867-ம் ஆண்டு முதல் 157 வருட காலமாக இதுவரையில் பெருவெளியாக இருந்த இடத்தை கட்டிடங்கள் கட்டி சிறுவெளியாக ஆக்காதீர்கள்.

வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளியை தவிர்த்து மாற்றிடத்தில் அமைக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் கட்டுமான வேலைகளை தொடராமல் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் பார்வதிபுரம் மூதாதையர்களிடம் தானமாக பெறப்பட்ட 31 காணி (106 ஏக்கர்) நிலத்தை மறு அளவீடு செய்து அரசாணை வெளியிட வேண்டும். திருவருட்பா உரைநடை பகுதியில் இருந்து எங்கள் முன்னோர்கள் தானமாக நிலம் கொடுத்தவர்களின் பெயர் பட்டியல் நீக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது இது போன்ற செயல்கள் எங்களது உரிமையை பறிக்கும் செயலாகும்.

நீக்கப்பட்ட பக்கத்தை தினசரி நாளிதழில் வள்ளலார் தெய்வ நிலையம் நிர்வாகம் சார்பாக வெளியிட வேண்டும், வள்ளல் பெருமானார் நிறுவிய ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ மட்டுமே தலைமைச் சங்கமாக செயல்பட வேண்டும். வள்ளலாரின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வடலூர் தலைமை சங்கத்தை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பாக எங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவின் மீது இது நாள் வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மற்றும் எந்த ஒரு நிர்வாக அதிகாரிகளும் எங்களை அழைத்து பேசவில்லை” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வதிபுரம் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறங்கி சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வடலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 91 பெண்கள், 70 ஆண்கள் ஆகிய 161 பேரை கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு 19-ம் தேதி நடைபெறும் நிலையில். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.