விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `ரோமியோ’.
யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி, விஜய்யின் அரசியல் என்ட்ரி, தமிழ்நாட்டின் சாலைகளில் நடைபெறும் ‘Happy Street’ கலைநிகழ்ச்சிகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய விஜய் ஆண்டனி, “விஜய் சார் 17 வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து நீண்டகால உழைப்பிற்குப் பிறகு சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார். தனக்கு அன்பு கொடுத்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அது வரவேற்கத்தக்கதுதான். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் சாருக்காக மட்டும் நான் குரல் கொடுக்கவில்லை. திருமாவளவன், விஜய், ஸ்டாலின் என அனைவருக்கும் குரல் கொடுக்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.
அதேசமயம், மக்கள் ஓட்டுக்குப் பணம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் ரொம்ப வறுமை, அடுத்த வேலைக்குச் சாப்பாடு இல்லை, பசங்களுக்குப் பள்ளிக்கட்டணம் கட்ட பணமில்லை என்ற சூழலில், ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஓட்டை நல்லவர்களுக்குப் போடுங்கள்” என்று கூறினார்.
வெளிநாடுகளில் நடப்பதுபோல தமிழ்நாட்டிலும் ‘Happy Street’ என்ற கலைநிகழ்ச்சிகள் சாலைகள் நடத்தப்படுகின்றன. மக்கள் தங்கள் கலைத் திறமைகளைச் சாலைகளில் நடக்கும் இந்த ‘Happy Street’ என்ற கலைநிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகின்றனர். இது அரசின் அனுமதியுடன் இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
பலரும் இதற்கு ஆதரவு தந்து வரவேற்கின்றனர். ஆனால் ஒரு சிலர் பெண்கள், ஆண்கள் சேர்ந்து சாலைகளில் நடனமாடுவதும், மாடர்ன் ஆடைகளில் பெண்கள் பங்கேற்பதும் கலாசார சீரழிவு என்று விமர்சித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழ் சினிமா நடிகர் ரஞ்சித், இந்த ‘Happy Street’ கலைநிகழ்ச்சியைக் கலாசார சீரழிவு என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அது அந்தச் சமயத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இசைக் கச்சேரிகள் பல நடத்தி வரும் விஜய் ஆண்டனியிடம் இது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்க, “பணம் இருப்பவர்கள், வசதியானவர்கள் பெரிய பெரிய மேடைகளில், கலை அரங்குகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். எளிய, பணம் இல்லாத மக்கள் சாலைகளில் நடக்கும் ‘Happy Street’ நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை. இதில் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதாக விமர்சிக்கிறார்கள். ஏதோ ஒரு சில பெண்கள் செய்வதை வைத்து ஒட்டுமொத்தமாக எல்லோரையும் தவறாகப் பேச முடியாது. பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.