சென்னை அணி இந்த சீசனை சிறப்பாகத்தான் தொடங்கியிருந்தது. சேப்பாக்கத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள். ஆனால், சொந்த ஊரை விட்டு வெளியேறியவுடன் கொஞ்சம் தடுமாறத் தொடங்கியது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள். ஆரம்பத்தில் வலுவான அணியாகத் தெரிந்த சென்னை அணி, இப்போது சுமாரான ஒன்றாகத் தெரிகிறது.
இப்போது மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியிருக்கிறது. சேப்பாக்கத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்ளவிருக்கிறது. ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை அணி? அப்படித் தவிர்க்க வேண்டுமெனில் சென்னை அணி சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். அவை என்னென்ன?
பவர்ப்ளே பேட்டிங்:
பவர்ப்ளேயில் பேட்டிங்கில் சென்னை அணி ஒரு நல்ல மொமென்ட்டமை பெற்றே ஆக வேண்டும். முதல் இரண்டு போட்டிகளில் பரவாயில்லை. ஆனால், தோல்வியுற்ற கடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியின் ஓப்பனர்கள் சுமாராகவே ஆடியிருந்தனர். சேர்ந்தாற்போல நான்கு டாட் பந்துகளை ஆடிவிட்டால் அழுத்தம் ஏறி உடனே அவுட் ஆகிவிடுகிறார் ரச்சின் ரவீந்திரா. கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் இன்னும் ஃபார்முக்கே வரவில்லை. இதனால்தான் பவர்ப்ளேயில் சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளாகப் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை.
இந்த சீசனில் பவர்ப்ளேயில் சென்னை அணியின் சராசரி ஸ்கோர் 52. அதேநேரத்தில் கொல்கத்தா அணியின் சராசரி பவர்ப்ளே ஸ்கோர் 72. ஆடியிருக்கும் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பவர்ப்ளேயில் 80க்கும் அதிகமான ரன்களை எடுத்திருக்கின்றனர்.
சுனில் நரைன் தயக்கமின்றி அதிரடியில் மிரட்டுகிறார். தோல்வியைத் தவிர்க்க வேண்டுமெனில் கொல்கத்தாவிற்கு பெரியவில் ரன்களைக் கொடுக்கக்கூடாது. அதேமாதிரி, பேட்டிங்கிலும் பவர்ப்ளேயில் ஓப்பனர்கள் இருவருமே சிறப்பாக ஆடி பெரிய ஸ்கோரை எடுக்க உதவ வேண்டும்.
பௌலிங்:
தோல்வியுற்ற இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியின் பௌலிங் பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. ஜடேஜாவைத் தவிர்த்து ஸ்பின்னர்கள் லெவனில் இல்லை. மொயீன் அலி போன்ற வீரர்கள் இருந்தாலும் அவர்களை முறையாகப் பயன்படுத்துவதில்லை. தீபக் சஹார் ஃபார்மில் இல்லை. மற்ற பௌலர்களுக்கு அனுபவம் இல்லை. எதிரணி வீரர்களிடம் பலத்த அடி வாங்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். பதிரனா இந்தப் போட்டியிலும் ஆடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
யாரேனும் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை எடுத்து நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு போட்டிகளிலும் அது நடந்திருக்கவில்லை. கடந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே பவர்ப்ளேயில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும்தான் வீழ்த்தியிருந்தார்கள். அதுவும் சன்ரைசர்ஸூக்கு எதிராக அபிஷேக் சர்மா பவர்ப்ளேயிலேயே ஏறக்குறைய ஆட்டத்தையே முடித்து வைத்துவிட்டார். அதன்பிறகுதான் அவரின் விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
கொல்கத்தா அணி வலுவான பேட்டிங் லைன் அப்பை கொண்டிருக்கிறது. அவர்களின் லைன் அப்பை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைக்காமல் விட்டால் பெரிய ஸ்கோரை ரொம்பவே எளிதாக எடுத்துவிடுவார்கள்.
சேஸிங் என்றாலும் சுலபமாக முடித்துவிடுவார்கள். ஆக, சென்னை அணியின் பௌலர்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பேட்டிங் சொதப்பல்:
ஆரம்பத்திலிருந்தே அத்தனை பேட்டர்களும் ஆக்ரோஷமாக ஆடுவதுதான் தொடக்கத்தில் சென்னை அணியின் திட்டமாக இருந்தது. ஆனால், கடைசி 2 போட்டிகளிலும் அது எடுபடவில்லை. டெல்லிக்கு எதிராக ரஹானேவும் தோனியும் மட்டுமே அப்படி ஆடியிருந்தனர். சன்ரைசர்ஸூக்கு எதிராக சிவம் துபே அப்படி ஆடியிருந்தார். மற்ற பேட்டர்கள் எல்லாம் சுமாராகவே ஆடியிருந்தனர். எதிர்பார்த்ததைப் போலப் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் அவர்களால் ஆட முடியவில்லை. இதுவுமே பெரிய பிரச்னையாக இருக்கிறது. பயங்கர வலுவாகத் தெரிந்த பேட்டிங் லைன் அப் திடீரென சுமாராகத் தெரிகிறது. கீழ் வரிசை வரைக்கும் பேட்டிங் வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க சென்னை அணி கொஞ்சம் கூடுதல் துணிச்சலுடனே ஆடலாம்.
சேப்பாக்கம் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்குச் சாதகமான பிட்ச் என்பதால் இந்தப் போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் மீண்டெழக்கூடும்.
இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற உங்களின் கணிப்பை கமென்ட்டில் சொல்லுங்கள்.