கமலின் `இந்தியன் 2′ வரும் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கமலின் சமீபத்திய பேட்டியில் கூட, “படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று சொல்லியிருந்தார். இதனால் படம் ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதமோ திரைக்கு வருமென எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது ஜூன் மாதம் வெளிவரும் என்று அறிவித்துள்ளனர்.
ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகம் 1996-ம் ஆண்டு, மே மாதம் 9ம் தேதி வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் கைகோத்தது. கமலின், ‘வீரசேகரன் சேனாபதி’ எனும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘இந்தியன் 2’ உருவானது. இந்தப் படத்தில் கமலுடன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, விவேக், மாரிமுத்து, மனோபாலா எனப் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கமலின் கடும் உழைப்பு, பெரும் நட்சத்திரங்கள், தேர்ந்தெடுத்த டெக்னீசியன்கள் என ஸ்கிரிப்ட்டுக்கே அதிக நாள் எடுத்துக்கொண்டு ஷங்கர் செதுக்கிய படம்தான் இது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், மே மாதமாவது திரைக்கு வந்திருக்கலாம். ஆனால், ரிலீஸை ஜூனிற்குக் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் இது.
இயக்குநர் ஷங்கர் இப்போது ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பும் நிறைவடையும் தருணத்தில் இருக்கிறது. ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு எத்தனையோ இன்னல்களைத் தாண்டி நடந்து முடிந்தாலும் கூட, எதிர்பார்ப்பை விடப் பல மடங்கு சிறப்பாக வந்திருக்கிறது என்கிறார்கள். இதனால் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளில் தீவிர கவனமெடுத்து படத்தைக் கொண்டு வர நினைக்கிறார் இயக்குநர் ஷங்கர். இதற்காக அவரே உடனிருந்து கிராபிக்ஸைக் கவனிக்க விரும்புகிறார்.
இப்போது ராம் சரண் படப்பிடிப்பிற்கு இடையே அவர் இதிலும் கவனம் செலுத்தி வந்தாலும், கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் பர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என்பதாலேயே ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளனர். பிரபல வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையில் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. எனவே கிராபிக்ஸ் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர்தான் எடிட் டெஸ்கிலும் படத்தின் பைனல் காப்பியை லாக் செய்யவுள்ளனர். அநேகமாக மே மாத இரண்டாம் வாரத்தில்தான் படம் முற்றிலும் ரெடியாகும் என்ற பேச்சு இருக்கிறது. படம் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் திரைக்கு வருகிறது.
அதைப் போல `இந்தியன் 3′ படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. `இந்தியன் 2′ வெளியீட்டிற்குப் பிறகு `இந்தியன் 3′ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெறும் என்கிறார்கள்.