புதுடெல்லி: பைசாகி கொண்டாட்டத்துக்காக இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் 2,843 விசாக்களை வழங்கி உள்ளது.
பைாசாகி என்றும், வைசாகி என்றும் அழைக்கப்படும் சீக்கியர்களின் அறுவடைத் திருவிழாவை முன்னிட்டும், சீக்கியர்களின் குருவான குரு கோபிந்த் சிங் 1699-ல் கல்சா பாதையை உருவாக்கியதன் நினைவு தினத்தை முன்னிட்டும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் விழா நடைபெற உள்ளது.
வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் 2,843 சீக்கியர்களுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கி இருக்கிறது.
இது குறித்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் தூதரகம், ‘பாகிஸ்தானில் ஏப்ரல் 13 முதல் 22 வரை நடைபெறும் பைசாகி கொண்டாட்டத்தில் இந்தியாவில் இருந்து பங்கேற்க உள்ள 2,843 சீக்கிய யாத்ரீகர்களுக்கு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கி உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரு நானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 3000 சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் அந்நாடு விசா வழங்கியது. அப்போது புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாபா குரு நானக்கின் 554-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் 3000 பேர் பாகிஸ்தான் செல்ல விசா வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2023, நவம்பர் 25 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற உள்ள குரு நானக் ஜெயந்தி விழாவில் அவர்கள் பங்கேற்க முடியும்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே 1974-ம் ஆண்டு மத வழிபாட்டுத் தளங்கள் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், மத ரீதியிலான வழிபாடுகளுக்கான விசாக்களை வழங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது.