ஐந்து மாதங்களில் 33,000 அப்பாவி உயிர்களைப் பலிகொண்டிருக்கும் ஹமாஸ் போர், தொடர்ந்து நடைபெறுவதற்கு முக்கியக் காரணம் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பிடிவாதம்தான். அந்தப் பிடிவாதத்துக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெதன்யாகுவுக்கு எதிராக நெருக்கடிகள் கிளம்பியிருக்கின்றன!
கடந்த ஆண்டு, இஸ்ரேல் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைக்க நெதன்யாகு சட்டம் கொண்டுவர, அதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். `நெதன்யாகு பதவி விலக வேண்டும்’ என்ற கோஷம் நாடு முழுவதும் ஒலித்துவந்த நிலையில், ஹமாஸ் உடனான போரைத் தொடங்கியது இஸ்ரேல். போர் காரணமாக மக்கள் போராட்டம் அடங்கிப் போனது. போர் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் நெதன்யாகுவுக்கு எதிராக வீதியில் இறங்கியிருக்கின்றனர்.
`உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் பணயக் கைதிகளை மீட்க வேண்டும்’ என்பவை தான் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள். ஆனால், நெதன்யாகுவின் ஆதரவாளர்களோ, `ஹமாஸ்தான் நமது எதிரி. நெதன்யாகு அல்ல என்பதைப் போராட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்கின்றனர். இதற்கிடையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் பணியில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்ட `வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன்’ தன்னார்வ அமைப்பு ஈடுபட்டிருந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, போலந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த அமைப்புக்காக காஸாவில் பணியிலிருந்தனர். அவர்களில் ஏழு பேர், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். `இது தற்செயலாக நடந்தது’ என மழுப்பல் விளக்கமளித்தார் நெதன்யாகு. இந்தச் சம்பவம் உலக நாடுகளைக் கோபமடையச் செய்திருந்த நிலையில், நெதன்யாகுவைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில், “காஸாவில் அப்பாவிப் பொதுமக்கள் பசியால் தவிப்பதும், உதவிசெய்ய வந்தவர்களும் கொல்லப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்து ஹமாஸுடன் தாமதமின்றி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் எடுக்கும் உடனடி நடவடிக்கைகளைப் பொறுத்தே அமெரிக்காவின் நிலைப்பாடு, இருக்கும்’’ என பைடன் எச்சரித்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
காஸா போருக்கு இத்தனை நாள்களாக ஆதரவு வழங்கிய அமெரிக்காவின் நிலைப்பாடு சற்று மாறியிருக்கிறது. சமீபத்தில், ஐ.நா-வில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்துக்குப் பிறகும் போரை நிறுத்தாத நெதன்யாகு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குப் பிறகாவது போரை நிறுத்த வேண்டும்!
– நா.வருண்