சிட்ரனில் இருந்து பசால்ட் என்றொரு கார் வருவதாக சில மாதங்களுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்து கொண்டிருந்தன. நம் மோட்டார் விகடன் வாசகர்கள் சிலரே பசால்ட் கார், சென்னையில் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வருவதைப் படம் எடுத்து அனுப்பி வந்தனர். உண்மையில் பசால்ட் என்கிற காரின் முந்தைய பெயர் C3X என்பதாகத்தான் இருந்தது. அந்தக் காருக்குத்தான் இப்போது Basalt என்று நாமம் சூட்டியிருக்கிறது சிட்ரன் நிறுவனம். இப்போது பசால்ட் காரை, நமது வாசகரான ஸ்ரீராம் என்பவர், ஸ்பை புகைப்படங்கள் எடுத்து அனுப்பியிருக்கிறார்.
சிட்ரன் பசால்ட் பற்றி ஒரு ஷார்ட் நியூஸ்!
பிரெஞ்சுக் கம்பெனியான சிட்ரன் நிறுவனம், நம் இந்தியாவில் C5 ஏர்க்ராஸ் எனும் கார் மூலமாகத்தான் இந்தியாவில் டயர் பதித்திருந்தது. சிட்ரனில் eC3 என்றொரு எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக், இப்போதுள்ள மார்க்கெட்டில் நல்ல பேட்டரி திறனோடும், ரேஞ்ச்சோடும் வந்து கொண்டிருக்கிறது.
ஓகே! விஷயத்துக்கு வரலாம். பசால்ட் என்பது ஒரு கூபே கார். அல்லது க்ராஸ்ஓவர் செடான் வகை என்றும் சொல்லலாம். இது எலெக்ட்ரிக் இல்லை; ICE கார்தான். இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும். இது C3 ஏர்க்ராஸில் இருக்கும் அதே இன்ஜின். 110bhp பவர் – மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
C Cubed ப்ளாட்ஃபார்ம் என்றொரு டிசைன் கான்செப்ட், சிட்ரனில் இருக்கிறது. அதில்தான் C3, eC3, C3 Aircross என்று 3 கார்கள் ரெடியாகின. அதன்படி உருவாகும் 4-வது கார்தான் இந்த பசால்ட்.
செடான் ப்ரொப்போர்ஷன்களுடன், ஒரு எஸ்யூவி ஜீன் கலந்து இதை ரெடி செய்திருக்கிறார்கள். அதாவது, நீங்கள் எஸ்யூவி விரும்பி என்றாலும் இதை வாங்கலாம்; செடான் விரும்பி என்றாலும் இதைத் தேர்ந்தெடுக்கலாம்.
பார்ப்பதற்கு C3 ஏர்க்ராஸ் போலவேதான் அச்சு அசலாக இருக்கிறது இது. கிரில் இன்செர்ட்கள் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி அந்த க்ரோம் ஃபினிஷ்டு Chevron லோகோ இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு C3X காரின் புகைப்படம் கிடைத்திருந்தது. அதற்கும் இந்த பசால்ட்டுக்கும் ரூஃப் மட்டும் வித்தியாசப்படுகிறது.
எஸ்யூவி என்பதால், இதன் தாடையில் சில்வர் ஸ்கிட் ப்ளேட்டும், சதுரமான வீல் ஆர்ச்சுகளும் வைத்திருக்கிறார்கள். C பில்லருக்கு ஸ்டைலிஷான பிளாக்டு-அவுட் எக்ஸ்டென்ஷன், அந்த ஜன்னல் கண்ணாடி லைனில் தெரிகிறது. புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ் இதில் இருக்கும். மற்ற C மாடல்களில் சாதா ஹாலோஜன் பல்புகள்தான். மற்றபடி எல்இடி டே டைம் ரன்னிங் லைட்கள் எல்லாம் அதே! கூபே ஸ்டைல் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இதன் பின் பக்கம் நிச்சயம் பிடிக்கும். செம ஸ்டைலாக இருக்கிறது பார்ப்பதற்கே! கூபே டிசைன்தான் இதன் ஹைலைட் என்பதால், சிட்ரன் நிறுவனம் கூட இதன் பின் பக்கத்தைக் காட்டியேதான் விளம்பரம் செய்து வருகிறது.
C3 ஏர்க்ராஸ் காரின் அதே அளவுகள்தான் இதிலும். இதன் நீளம் 4.3 மீட்டர். கூபே லைக் ரூஃப் லைன்தான் இதன் பெரிய அட்ராக்ஷனாக இருக்கப் போகிறது. தானாக மடியும் எலெக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி என வசதிகள் எக்கச்சக்கம்!
இதேபோல், டாடாவில் இருந்து கர்வ் என்றொரு கார் வரப் போகிறது. மிட் சைஸ் எஸ்யூவி கூபே மார்க்கெட்டில் நல்ல போட்டி இருந்தால் கொண்டாட்டம்தானே!
இந்த C3 பசால்ட்டைத் தொடர்ந்து, இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் கொண்டு வரப் போகிறதாம் சிட்ரன். சிட்ரனைப் பொருத்தவரை ஒரு விஷயத்தில்தான் பயமாக இருக்கிறது. அது, விலை! ஏற்கெனவே C5 ஏர்க்ராஸின் விலை, ஒரு ஃபார்ச்சூனரை நெருங்குகிறது. இந்த பசால்ட் எதை நெருங்கப் போகிறது என்று தெரியவில்லை. பசால்ட்டின் விலை எம்புட்டு இருந்தால் எடுபடும் என்று சொல்லுங்கள்!